Ad Banner
Ad Banner
 பொது

பெட்ரோனாஸ்: மே இறுதி வரை எரிபொருள் விநியோகம் உள்ளது

15/04/2026 04:02 PM

கோலாலம்பூர், ஏப்ரல் 15 (பெர்னாமா) -- நாடு முழுவதும் உள்ள தனது எரிபொருள் நிலையங்களில், இவ்வாண்டு மே மாத இறுதி வரை எரிபொருள் விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பெட்ரோனாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2026ஆம் ஆண்டு மே மாத வரை எரிபொருள் விநியோகம் நீடிக்கும் என்று அந்நிறுவனம் இதற்கு முன்னர் கணித்தது, மீண்டும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேற்கு ஆசிய மோதலால் ஏற்பட்டுள்ள தற்போதைய உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், தனது நிலைய வலையமைப்பு முழுவதும் போதுமான கையிருப்பு இருப்பதை உறுதி செய்வதற்காக, விநியோகச் சங்கிலியைத் தொடர்ந்து தீவிரமாக நிர்வகித்து வருவதாக பெட்ரோனாஸ் குறிப்பிட்டுள்ளது.

பெட்ரோனாஸ் தனது பொதுப் பங்கு துணை நிறுவனமான Petronas Dagangan மூலம் நாட்டின் எரிபொருள் தேவைகளில் சுமார் 50 விழுக்காட்டைப் பூர்த்தி செய்வதோடு, எஞ்சியவை மலேசியாவில் செயல்படும் பிற எண்ணெய் நிறுவனங்களால் வழங்கப்படுவதாக அந்நிறுவனம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டது.

அனைத்து மலேசியர்களுக்கும் நிலையான மற்றும் நம்பகமான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டை பெட்ரோனாஸ் மீண்டும் வலியுறுத்தியது.

இந்நிலையில், பொதுமக்களும் தங்களின் அன்றாடத் தேவைகளுக்கு ஏற்ப பொறுப்புடன் எரிபொருளை வாங்கவும், பதுக்கி வைப்பது அல்லது பீதியில் அதை கொள்முதல் செய்வதைத் தவிர்க்கவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும், எரிபொருளைப் பொறுப்புடன் பயன்படுத்துவது, அனைவருக்கும் அது தொடர்சியாக கிடைப்பதை உறுதிசெய்ய உதவும் என்றும் அந்நிறுவனம் அறிவுறுத்தியது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)