கோலாலம்பூர், ஏப்ரல் 15 (பெர்னாமா) -- ''ஆறு விநாடி தூக்க சிகிச்சை முறை''....
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படாமல் நாட்டின் பல்வேறு இடங்களில் மாற்று சிகிச்சை முறையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
ஒருவரை தற்காலிக மயக்க நிலைக்கு உட்படுத்தி, ஆறு விநாடிகள் தூங்க வைக்கும் இந்த சிகிச்சை முறை உடலுக்கு ஆபத்துக்களை விளைவிக்கும் நோய்களை ஏற்படுத்துவதோடு உயிரை பறிக்கும் அபாயத்தையும் உள்ளடக்கியிருப்பதாகக் கூறுகின்றார் இருதய நோய் நிபுணர் டாக்டர் சதிஸ்குமார் கோவிந்தராஜூ.
இன்றைய காலக்கட்டத்தில், அனைத்து விதமான தகவல்களைத் திரட்டுவதிலும் ஆலோசனைகளைப் பெறுவதிலும் செயற்கை நுண்ணறிவு, ஏ.ஐ செயலிகளையும் சமூக வலைத்தளங்களையும் மக்கள் நாடுவது மறுப்பதற்கில்லை.
சமூக வலைத்தளங்களும் அதற்கு ஏற்றாற்போல, சுகாதாரம் உட்பட பல்வேறு புதுப்புது தகவல்களை மக்களுக்கு வழங்கி வரும் வேளையில், அண்மையில் சமூக வலைத்தளத்தில் குறிப்பாக டிக் டோக்கில் 'ஆறு விநாடி தூக்கச் சிகிச்சை' முறை குறித்து பரப்பப்பட்டு வருகிறது.
இந்த சிகிச்சை முறையை மேற்கொள்வதால் புத்துணர்ச்சி கிடைக்கும் என்ற தவறான புரிதல் மக்களிடையே ஏற்படும்.
ஆனால், அது தவறான ஒரு கண்ணோட்டம் என்று டாக்டர் சதிஸ்குமார் கோவிந்தராஜூ குறிப்பிட்டார்.
''இந்த மாதிரி சிகிச்சை முறைகளில் கழுத்துப் பகுதிகளில் அழுத்தம் கொடுக்கிறார்கள். நம்ப கழுத்திற்குப் போகக்கூடிய ரத்த ஓட்டம் தடுக்கப்படுகிறது. Carotid arterie என்று இரண்டு பெரிய இரத்த நாளங்கள் உள்ளன. அங்கு அழுத்தம் கொடுக்கும்போது மூளைக்குச் செல்கின்ற இரத்த ஓட்டம் தடைப்படுகிறது. இந்தத் தடையின் போது ஆக்சிஜன் குறைவதால் ஏற்படக்கூடிய மயக்கநிலைதான் இது. இதனை Convulsive syncope என்றுக் கூறுவார்கள்,'' என்றார் அவர்.
வழக்கமாக நீண்ட நாள்கள் தூக்கப் பிரச்சனையை எதிர்கொள்பவர்கள், ஆறு விநாடிகள் தூங்கினால், எட்டு மணி நேரம் தூங்கியது போன்ற புத்துணர்ச்சி கிடைக்கு என்று இந்த சிகிச்சை முறையில் கூறப்படுகிறது.
ஆனால், இந்த சிகிச்சைக்குப் பின்னர் வரும் விழிப்பு நிலையும் புத்துணர்ச்சியும், வழக்கமான தூக்கத்திற்குப் பின்னர் ஏற்படும் விழிப்பு நிலையோ புத்துணர்ச்சியோ அல்ல.
மாறாக, அது ஹார்மோன் மாற்றங்கள் என்று விளக்குகிறார் டாக்டர் சதிஸ்குமார்.
''இரத்த ஓட்டம் தடைப்படும் போது மூளை அறிகுறிகள் கொடுக்கும். அதாவது, இரத்த அழுத்தம் குறைந்துவிட்டது போன்று. நம் உடம்பில் Adrenaline போன்ற ஹார்மோன்கள் வெளியாகும். இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதற்காக. அதனால், அந்த 6 விநாடி தூங்கும் நிலைக்கு போய்விட்டு எழும்போது, கூடுதலாக ஒரு புத்துணர்ச்சி கிடைத்த மாதிரி தோன்றும். அது புத்துணர்ச்சி கிடையாது.,'' என்றார் அவர்.
இந்த சிகிச்சையைப் பெறும் போது சம்பந்தப்பட்ட நபருக்கு இதயத் துடிப்பு குறைவதற்கான சாத்தியங்களும் உள்ளன.
மேலும், அடிப்படையில் இது ஒரு சிகிச்சை முறையே இல்லை என்று சுட்டிக் காட்டிய டாக்டர் சதிஸ்குமார், இதனால் ஏற்படும் மேலும் சில ஆபத்துகள் குறித்தும் விளக்கினார்.
''மூளைக்கான இரத்த ஓட்டத்தை தடைச் செய்வதால், ஏற்கனவே இரத்தக் குழாய் பிரச்சனை உள்ளவர்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கு அதிக சாத்தியம் உள்ளது. இந்த மாதிரி சிகிச்சை வழங்கப்படும் இடங்களில் ஆபத்தான சூழ்நிலைகள் நிகழ்ந்தால், முதல் உதவி செய்வதற்கான சாத்தியங்களும் இல்லை என்பதால் அரசாங்கம் இது போன்ற சிகிச்சைகளைத் தடை செய்துள்ளது,'' என்றார் அவர்.
எனவே, உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கு மருத்துவரின் ஆலோசனை மற்றும் சரியான தூக்க பழக்கங்களை கடைப்பிடிப்பதே நலமான வாழ்க்கை முறைக்கு சிறப்பு என்று அவர் அறிவுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)