புத்ராஜெயா, 16 ஏப்ரல் (பெர்னாமா) -- உலகளாவிய எரிசக்தி சந்தைகள் மீதான அழுத்தம் மற்றும் விநியோகச் சங்கிலி இடையூறுகள் காரணமாக அதிகரிக்கும் நிச்சயமற்ற நிலைதன்மைக்கு மத்தியில், வலுவான எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்வதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மலேசியாவும் ஆஸ்திரேலியாவும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.
மூன்று நாள்கள் அலுவல் பயணம் மேற்கொண்டு, மலேசியா வந்திருக்கும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உடன் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வர் இப்ராஹிம் மேற்கொண்ட சந்திப்பின் போது இந்த உறுதிப்பாடு எட்டப்பட்டது.
''மலேசியா எப்போதுமே ஆஸ்திரேலியாவின் நம்பகமான பங்காளியாக இருக்கும். ‘தோழர்கள்’ என்று நீங்கள் ஏன் அந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறீர்கள் என எனக்கு தெரியவில்லை — ஆனால் நாங்கள் எப்போதும் போலவே, இன்பத்திலும் துன்பத்திலும் ஒன்றாக இருப்போம். இன்றைய நமது கலந்துரையாடல்கள் வர்த்தகம், முதலீடுகள் மற்றும் விவசாயம் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தன. ஆனால், இன்றைய உலகின் நிலையைக் கருத்தில் கொண்டு, நான் எரிசக்தியிலிருந்து தொடங்க விரும்புகிறேன்,'' என்றார் அவர்.
அதேபோல, மலேசியாவிற்கு முக்கிய உணவு வளங்களை வழங்குவதில் ஆஸ்திரேலியாவின் பங்கைக் குறிப்பிட்டு பேசிய அல்பானீஸ் இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான பரஸ்பர நிலையையும் எடுத்துரைத்தார்.
''எரிசக்திப் பாதுகாப்பு குறித்த ஒரு கூட்டறிக்கைக்கு நாம் ஒப்புக்கொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. உணவு மற்றும் எரிசக்தி ஆகிய அத்தியாவசியப் பொருள்கள் நமது இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பரிமாறப்படுவதை உறுதி செய்வதற்கான நமது உறுதிப்பாட்டை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மேலும், இந்த உலகளாவிய நெருக்கடிக்கு நாம் அளிக்கும் பதிலை ஒருங்கிணைக்கவும், எரிசக்தி வர்த்தகம் தொடர்வதை உறுதி செய்யவும் நமது எரிசக்தி அமைச்சர்கள் தொடர்ந்து இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டிருப்பதும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார் அவர்.
வியாழக்கிழமை புத்ராஜயாவில் நடைபெற்ற சந்திப்பில் இரு நாட்டு தலைவர்களும் தங்களின் அந்த உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]