Ad Banner
 சிறப்புச் செய்தி

இரு தலைமுறைகள்; ஓர் இசை

17/04/2026 06:52 PM

கோலாலம்பூர், 17 ஏப்ரல் (பெர்னாமா) --  நாதத்தின் நிழல்கள் பேசும் இடத்தில் காலத்தையும் நினைவுகளையும் தாண்டி ஒலிக்கும் இசையில் கடமும், வீணையும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

மண்மனக்கும் கடத்தின் தாளமும், மனதை மயக்கும் வீணையின் ராகமும் இணையும்போது அது வெறும் இசையாக மட்டுமின்றி மரபும் மனமும் இணையும் ஓர் அற்புத பயணமாகவும் திகழ்கின்றது.

அந்த வகையில், தாய் மற்றும் சேய் இணைந்து வடிவமைக்கும் இந்த இசைப் பயணம் குறித்த நேர்காணல் தொடர்ந்து இடம்பெறுகின்றது.

விரல்கள், உள்ளங்கை மற்றும் கையின் பிறப்பகுதிகள் என ஒவ்வொன்றும் தனித்தனி ஒலியை உருவாக்கி கடத்திற்கு உயிர் கொடுக்கின்றன.

அந்த வகையில், இசை, குறிப்பாக, கர்நாடக இசையில் ராகத்தையும் உணர்வையும் புரிந்து கொண்டு அதற்கேற்ற தாள அமைப்பை கடம் இசைக்கலைஞர்கள் உருவாக்க வேண்டும் என்பதால் அது பல நுணுக்கங்களையும் அனுபவங்களையும் உள்ளடக்கி இருப்பதாக, கடம் இசைக்கலைஞர் ஆச்சார்யா ரத்னா குரு விதுஷி ஶ்ரீமதி ஜெயலக்ஷ்மி ப்ரேம்குமார் கூறினார்.

''சில நேரங்களில் கைகளில் காயங்கள் ஏற்படும். ஆனால், முறையான அனுபவம் மற்றும் தொடர் பயிற்சியின் மூலம் கடத்தைச் சிறந்த முறையில் கற்றுக் கொள்ள முடிந்தது'', என்றார் அவர்.

ஒரு பெண்ணாக, மனைவியாக மற்றும் தாயாக பல பொறுப்புகளை ஒரே நேரத்தில் சுமந்து வரும் அவர், அவை அனைத்தையும் இசை வாழ்க்கையுடன் சமநிலைப்படுத்தும் முறைகள் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

இதனிடையே, வீணை இசைக்கலைஞராகவும் திகழும் தாயின் ஆர்வமே தமது வீணை இசை பயணத்திற்கு முக்கிய உந்துதலாக அமைந்ததாக, மகள் லோக் கலாரத்னா குரு குமாரி ஸ்வேதா ப்ரேம்குமார் கூறினார்.

''சிறுவயதில் மூன்று வயது முதலே தாயிடம் பயிற்சி பெற்றேன். அந்த வயதில் முறையாக கற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் என்னுடைய தொடர் ஆர்வத்தின் மூலம் வீணையைக் கற்றுக் கொள்ள முடிந்தது'', என்று அவர் கூறினார்.

தாய் மட்டுமின்றி தந்தை ப்ரேம்குமாரும் தன்னுடைய கலை வாழ்க்கையில் முதுக்கெலும்பாக திகழ்வதாக, அவர் கூறினார்.

அதோடு, தன்னுடைய இப்பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த அனுபவத்தையும் ஸ்வேதா பகிர்ந்து கொண்டார்.

அண்மையில், பெர்னாமா செய்திகளின் தயாரிப்பிலான பார்வை நிகழ்ச்சியில் சிறப்பு பிரமுகர்களாக கலந்து கொண்டு அவர்கள் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

பார்வை கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவு மணி 7.30-க்கு ஒளியேறும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)