கோத்தா கினபாலு, 19 ஏப்ரல் (பெர்னாமா) -- எஸ்.பி.எம் மற்றும் எஸ்.டி.பி.எம் முடித்த மாணவர்கள் உயர்க்கல்விக்கழகங்களில் இணைவதற்கு குறிப்பிட்ட வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
மாறாக, துறை சார்ந்த ஆர்வம் மற்றும் தகுதிக்கேற்ப அவர்கள் தங்களின் மேற்கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுகின்றது.
இவ்வாண்டு எஸ்.பி.எம் முடித்த ஒரு லட்சம் மாணவர்கள் மற்றும் எஸ்.டி.பி.எம் முடித்த 75,000 மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் மட்டுமின்றி, டிவெட் எனப்படும் தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி திட்டம் சார்ந்த துறைகளிலும் தங்களின் மேற்கல்வியைப் பயில்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதாக உயர்க்கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சம்ரி அப்துல் காடிர் தெரிவித்தார்.
''நாங்கள் அவர்களுக்கு முடிந்தவரை அதிக சுதந்திரம் கொடுப்பதால், எங்களுக்கு ஒரு குறிப்பிட்ட இலக்கு இல்லை. இவ்வாண்டு எங்களிடம் எத்தனை ஆயிரம் அதாவது ஒரு லட்சம் எஸ்.பி.எம் முடித்த மாணவர்களும் 75,000 எஸ்.டி.பி.எம் முடித்த மாணவர்களும் இருக்கிறார்கள். வழக்கமாக நம்மிடம் 2 லட்சம், 1 லட்சம், 75 ஆயிரம் பேர் இருப்பார்கள். இந்த இரண்டையும் இணைத்தால், தங்கள் படிப்பைத் தொடர ஆர்வமுள்ள அனைவருக்கும், அவர்களின் தகுதிகளுக்கு ஏற்ப நாங்கள் பகிர்ந்தளிப்பதை உறுதிசெய்கிறோம்,'' என்றார் அவர்.
மாணவர்கள் தங்களின் ஆர்வங்கள் மற்றும் தற்போதைய தொழில் தேவைகளுக்கு ஏற்ப, சான்றிதழ், பட்டயப் படிப்பு அல்லது இளங்கலை அளவில் தங்களின் மேற்கல்வியைத் தொடரலாம் என்று டாக்டர் சம்ரி ஆலோசனைக் கூறினார்.
இன்று சபா, கோத்தா கினபாலுவில் உள்ள மலேசிய சபா பல்கலைகழகத்துல் 'Jom Masuk Universiti Zon Sabah II' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)