கோலாலம்பூர், 20 ஏப்ரல் (பெர்னாமா) -- நெகிழ்வுத் தன்மையுள்ள பொருளாதாரம் மற்றும் உறுதியான அணிசேரா கொள்கையின் ஆதரவுடன் கணிசமான வெளிநாட்டு நிதி வரவுகளைப் பதிவுசெய்து, நிலையான மற்றும் கவர்ச்சிகரமான உலகளாவிய முதலீட்டு மையமாகத் தனது நிலையை மலேசியா தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.
மேற்காசியாவில் நிலவும் மோதல்களால் உலகளாவிய சந்தையில் ஏற்பட்ட நிலையற்ற சூழல் உட்பட எரிசக்தி விலைகள் அதிகரித்து வந்தாலும், மலேசியா மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கை திடமாக உள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
கடந்த சில வாரங்களில் 200 கோடி டாலருக்கும் அதிகமான மலேசிய முதலீட்டுப் பத்திரங்களை உலகளாவிய நிதியகங்கள் வாங்கியுள்ளதாகவும், இது கடந்த 10 மாதங்களில் ஏற்பட்ட அதிகபட்ச முதலீடு என்றும் அன்வர் தெரிவித்தார்.
''ரிங்கிட் தொடர்ந்து ஈராண்டுகளாக ஆசியாவின் சிறந்த செயல்திறன் கொண்ட நாணயமாக இருந்து வருகிறது. கடந்தாண்டு நமது பொருளாதாரம் 5.2 விழுக்காடு வளர்ச்சி கண்டது. மேலும், மலேசியா சாதனை அளவிலான முதலீடுகளையும் ஈர்த்துள்ளது'', என்றார் அவர்.
மலேசியாவின் தொழில்துறை வலிமையை எடுத்துரைத்த அன்வார், உலகம் அதிகமாகச் சார்ந்திருக்கும் முக்கியப் பொருள்களை இந்நாடு உற்பத்தி செய்வதை சுட்டிக்காட்டினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)