சண்டக்கான், 20 ஏப்ரல் (பெர்னாமா) -- சபா, சண்டக்கானில் உள்ள கம்போங் பஹாகியாவில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் கிட்டத்தட்ட 1,000 வீடுகள் அழிந்த நிலையில், இதில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத் தலைவருக்கும் தொடக்கக்கட்ட உதவியாக 2,000 ரிங்கிட்டை சபா அரசாங்கம் வழங்கி வருகிறது.
பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைக்கும் முயற்சியாக, மாநில அரசாங்கத்தின் 1,000 ரிங்கிட்டும் சபா நல்வாழ்வு அறக்கட்டளையின் 1,000 ரிங்கிட்டும் இதில் அடங்கும் என்று சபா முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நோர் தெரிவித்தார்.
அப்பகுதியை சட்டப்பூர்வ கிராமமாக மறுவடிவமைக்கும் திட்டம் உட்பட பல திட்டங்களை மாநில அரசாங்கம் தயாரித்து வருகிறது.
எனினும், அது தொடர்பிலான இறுதி முடிவு சண்டக்கான் மாவட்ட பேரிடர் நிர்வகிப்பு செயற்குழுவின் முழுமையான அறிக்கையைப் பொறுத்தே அமையும் என்று ஹஜிஜி விவரித்தார்.
"அகதிகள் பகுதியாக அறிவிக்கப்பட்டது. இந்தக் கிராமத்தை காம்போங் பஹாகியாவாக மாற்றிவோம். எங்களிடம் ஒரு திட்டம் உள்ளது. குறைந்தது ஓரிரு வாரங்களில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த அறிக்கையின் முழு விவரங்களையும் நாங்கள் பெறுவோம்," என்றார் அவர்.
இன்று, சபா, சண்டக்கான், பத்து சாப்பி மக்கள் வீடமைப்புத் திட்ட மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண மையத்தைப் பார்வையிட்டப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]