ஜார்ஜ்டவுன், 21 ஏப்ரல் (பெர்னாமா) -- கடந்த மார்ச் மாதம் சீனர் கல்லறையில் அருவருக்கத்தக்கச் செயலில் ஈடுபட்ட இருவருக்கு விதிக்கப்பட்ட 12 மாதக் கால சிறைத் தண்டனையை ஜார்ஜ்டவுன் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
கடந்த மார்ச் 26-ஆம் தேதி, மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் விதித்த அத்தண்டனையை ரத்து செய்யக் கோரி அவ்விருவரும் தாக்கல் செய்த சீராய்வு மனுவை அனுமதித்த நீதிபதி ரொஃபியா முஹமட் அம்முடிவை அறிவித்தார்.
எனினும், அவர்களுக்கான தண்டனை காலத்தை, அவர்கள் கைது செய்யப்பட்ட நாளான மார்ச் 23-ஆம் தேதியிலிருந்து இன்று வரை குறைப்பதற்கான உத்தரவையும் நீதிபதி ரொஃபியா பிறப்பித்தார்.
இந்நிலையில், அவ்விருவரையும் உடனடியாக விடுவிக்கும்படி அவர் உத்தரவிட்டார்.
இக்குற்றத்திற்கு விதிக்கப்பட்ட தண்டனை மிக அதிகம் என்று கருதி, அது தொடர்பிலான சீராய்வு மனுவை அரசுத் தரப்பிடம் தமது தரப்பு முன்னதாக சமர்ப்பித்ததாக அவ்விருவரின் வழக்கறிஞரான டத்தோ நரன் சிங் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)