செபெராங் பிறை , ஏப்ரல் 20 (பெர்னாமா) -- பினாங்கு, பெனாந்தியில் அமைந்துள்ள அரா குடா (Ara Kuda) ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் ஆலயத்தின் 140-ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.
1886-ஆம் ஆண்டு இப்பகுதியில் இந்திய சமூகத்தினர் குடியேறத் தொடங்கிய காலத்தில் கட்டப்பட்ட இந்த ஆலயம் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இந்தியர்களின் பண்பாட்டு அடையாளமாகவும் சமூக ஒருமைப்பாட்டு தளமாகவும் விளங்கி வருகிறது.
கேரளா மற்றும் தமிழ்நாட்டின் கட்டிடக்கலை நுட்பங்களை ஒருசேரக் கொண்டுள்ள இவ்வாலயத்தின் முகப்புக் கோபுரம், உலகப் புகழ்ப்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் கோபுர முன் வாசல் அமைப்பின் பாணியில் கட்டப்பட்டுள்ளது.
திருவிழாவிற்கு முன்னதாக 15 நாள்கள் சிறப்பு உபயங்களும் இரண்டு நாள்கள் ரத ஊர்வலமும் பாரம்பரிய முறையில் நடைபெற்றன.
ரத ஊர்வலத்தின் சிறப்பம்சமாக, சீன சமூகத்தினரும் திரளாகக் கலந்து கொண்டதுடன், பாரம்பரிய முறைப்படி தீபாராதனை எடுத்து அம்மனை வழிபட்டனர்.
மேலும், திருவிழாவின் முத்தாய்ப்பு அங்கமாக, எழில்மிகு குதிரை வாகனத்தில் எழுந்தருளிய ஶ்ரீ முத்து மாரியம்மன் அரா குடா ஆற்றங்கரைக்குச் சென்று சக்திக் கரகம் பாலித்து பின்னர் மீண்டும் ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டதாக ஆலயச் செயலாளர் தெரிவித்தார்.
"பொதுவாக மலேசியாவில் பினாங்கு நாட்டுக்கோட்டை செட்டியார்களின் வெள்ளி குதிரை வாகன ஊர்வலம் மிகவும் பிரசித்தி பெற்றது. அதனையடுத்து மலேசியாவிலேயே இந்த ஆலயத்தில், அம்மன் குதிரை வாகனத்தில் அமர்ந்து திருவீதி உலா வருவது இத்திருவிழாவின் சிறப்பம்சமாகும். மலேசியா அம்மன் ஆலயங்கள் என்று எடுத்துக்கொண்டால் இதுவே முதன்முறையாகும்.
இக்குதிரை வாகனத்தை என்.டி.எஸ் ஆறுமுகம் பிள்ளையின் மகன் புஷ்பராஜன் ஆலயத்திற்காக வழங்கியுள்ளார்," என்று அவர் கூறினார்.
மேலும், ஆலயத்திற்கு திரும்பும்போது கேரளா இசை, தப்பு மேளம் மற்றும் நாதஸ்வரக் கச்சேரி என மூவகை இசை சங்கமத்துடன் அம்மன் குதிரை வாகனத்தில் கம்பீரமாக அழைத்து வரப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தீமிதி மஹோற்சவத்தில் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குழி இறங்கித் தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.
இந்தியர்களின் பாரம்பரியத் திருவிழாவாக இருந்தாலும், இதில் சீனர்களின் சிங்க நடனமும் இடம்பெற்றிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)