லூசியானா, ஏப்ரல் 20 (பெர்னாமா) -- இன்று அதிகாலை அமெரிக்கா, லூசியானாவில் அமைந்துள்ள ஷ்ரீவ்போர்ட் நகரில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒன்று முதல் 14 வயதுக்குட்பட்ட எட்டு சிறுவர்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
எனினும், இச்சம்பவத்தை குடும்ப வன்முறை என அந்நாட்டு போலீசார் வகைப்படுத்தியுள்ளனர்.
உள்ளூர் நேரம்படி அதிகாலை மணி 5 அளவில் ஆயுதம் ஏந்திய நபர் ஒருவர் 10 பேரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி, திருடப்பட்ட காரில் தப்பிச் சென்றார்.
அருகிலுள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் போலீசாரால் நடத்தப்பட்ட துரத்தி பிடிக்கும் நடவடிக்கையில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த துயரச் சம்பவம் சமூகத்தையே அதிர்ச்சியடையச் செய்ததாக ஷ்ரீவ்போர்ட் நகரின் மேயர் Tom Arceneaux கூறினார்.
எனினும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சந்தேக நபரின் அடையாளங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
ஆனால், சம்பந்தப்பட்ட குழந்தைகளில் பலருக்கு சந்தேக நபருடன் குடும்பத் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)