Ad Banner
 உலகம்

மெக்சிகோ சிட்டியில் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல்

21/04/2026 05:05 PM

மெக்சிகோ சிட்டி, 21 ஏப்ரல் (பெர்னாமா) --  மெக்சிகோ சிட்டி நகரத்திற்கு அருகிலுள்ள தியோதிஹுவாகன் பிரமிடு பகுதியின் உச்சிக்குச் சென்ற மர்ம நபர் ஒருவர், அங்கிருந்து கீழே இருந்த கூட்டத்தை நோக்கிக் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கின்றார்.

இந்த தாக்குதலில் கனடாவைச் சேர்ந்த 40 வயது சுற்றுலாப் பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மேலும் நால்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்குப் பிறகு அந்த மர்ம நபர், பிரமிடு உச்சியிலிருந்து தமது உயிரை மாய்த்துக்கொண்டதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் திரண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்தத் துப்பாக்கிச் சூடு தொடங்கியதும் அங்கிருந்த நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அச்சத்தில் பாதுகாப்பான இடங்களைத் தேடி ஓடினர்.

தகவலறிந்து விரைந்து வந்த மெக்சிகோ பாதுகாப்புப் படையினர், அந்தப் பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தாக்குதலுக்கான நோக்கம் குறித்து மெக்சிகோ புலனாய்வுத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மெக்சிகோவில் உள்ள அனைத்து வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் பாதுகாப்பு உச்சகட்டமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2026 உலக் கிண்ண காற்பந்து போட்டியை மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தத் தயாராகும் நிலையில் அதற்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இச்சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)