Ad Banner
 பொது

மக்களின் நலன்களைப் பாதுகாக்க மாநில அரசு வழக்கம் போல் தொடர்ந்து செயல்பட வேண்டும் - துவாங்கு முஹ்ரிஸ்

23/04/2026 04:03 PM

சிரம்பான், 23 ஏப்ரல் (பெர்னாமா) -- நெகிரி செம்பிலான் நிர்வாகத்தின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்கும் மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் மாநில அரசின் நிர்வாகம் வழக்கம் போல் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர் கூறியிருக்கின்றார்.

மாநில சட்டமன்ற கூட்டத்தொடரின் ஒவ்வொரு தொடக்க விழாவிலும் வழக்கமாக வருகை தரும் அம்மாநில முக்கியப் பிரமுகர்கள் வராதபோதிலும், அது கூட்டத்தொடரை பாதிக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

''மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹரூன் மற்றும் மாநில அரசின் செயற்குழுவின் தலைமையின் கீழ், எனது மாநிலமும் மக்களும் தொடர்ந்து செழிப்பாகவும் நல்லிணக்கத்துடனும் வாழ வேண்டும் என்றும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். 2025-ஆம் ஆண்டின் சிறப்பான செயல்பாட்டைத் தொடர்ந்து என் அரசாங்கத்தில் நிலவும் வலுவான ஒத்துழைப்பிற்கு நான் மிகவும் நன்றியுணர்வுடன் இருக்கிறேன்,'' என்று துவாங்கு முஹ்ரிஸ் கூறினார்.

இன்று, நெகிரி செம்பிலான் மாநில 15வது சட்டமன்றத்தின் நான்காம் தவணைக்கான முதலாவது கூட்டத்தொடரை தொடக்கி வைத்து துவாங்கு முஹ்ரிஸ் உரையாற்றினார்.

2023, 2024, 2025-ஆம் ஆண்டு மற்றும் இந்த ஆண்டு வரை, கடுமையான வறுமை இல்லாத நிலையை அடைந்த முதல் மாநிலம் என்ற வரலாற்றுச் சாதனையை நெகிரி செம்பிலான் படைத்துள்ளதாக அவர் கூறினார்.

இதனிடையே, மாநிலத்தில் உயர் பதவி மற்றும் உயர்நிலை பொறுப்பில் உள்ளவர்கள், தொடர்புடைய அனைத்து உண்மைகளையும் தகவல்களையும் முழுமையாக ஆராய்ந்த பின்னரே ஒவ்வொரு செயலும் முடிவும் எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று துவாங்கு முஹ்ரிஸ் நினைவுறுத்தினார்.

எடுக்கப்படும் ஒவ்வொரு செயலும் முடிவும், நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டிகள் மற்றும் சட்டங்களின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

''ஆசைகள் மற்றும் உணர்ச்சிகளால் மட்டுமே உந்தப்பட்டு ஒருபோதும் முடிவுகளையோ செயல்களையோ மேற்கொள்ளாதீர்கள். இந்தக் கொள்கையைக் கடைப்பிடிக்கத் தவறினால், நிர்வாகத்தின் நேர்மையும் மாநிலத்தின் நல்வாழ்வும் பாதிக்கப்படலாம்,'' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஒரு பிரச்சனை குறித்த ஒவ்வொரு மதிப்பாய்வும் அல்லது கருத்தும் முழுப் பொறுப்புடனும் ஆழ்ந்த புரிதலுடனும் செய்யப்பட வேண்டும் என்றும் துவாங்கு முஹ்ரிஸ் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)