Ad Banner
 பொது

சாதாரண நோயாக புறக்கணிக்கப்படும் APPENDICITIS

23/04/2026 07:58 PM

கோலாலம்பூர், 23 ஏப்ரல் (பெர்னாமா) --  உலகளவில் ஆண்டுக்குச் சுமார் ஒரு கோடி APPENDICITIS நோயாளிகள் பதிவு செய்யப்படுவதாக உலக சுகாதார நிறுவனம், WHO-வின் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

சாதாரண வயிற்று வலியாக கருதப்பட்டு, புறக்கணிக்கப்படும் நோய்களில் APPENDICITIS நோயும் ஒன்றாக கருதப்படுகின்றது.

குடலின் ஒரு சிறிய பகுதியில் ஏற்படும் இந்த பிரச்சனை, தொடக்கத்தில் மிதமான வலியாக தோன்றினாலும் பின்னாளில் அது கடுமையான உடல்நலப் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் அபாயம் இருப்பதாக கூறுகின்றார் குடும்ப நல மருத்துவர் டாக்டர் கோமதி சௌ குவாய் இங்.

இளம் வயதினர் குறிப்பாக 10 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் மத்தியில் இந்நோய் அதிகம் ஏற்படுவதாக டாக்டர் கோமதி கூறினார்.

இதற்கு மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் ஆகியவை காரணம் என்று அவர் விளக்கினார்.

தொடக்கத்தில் அரிப்பு, வலி, வாந்தி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் ஆரம்பித்து, நாளடைவில் அவை தீவிரமடையும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக, டாக்டர் கோமதி எச்சரித்தார்.

தொடக்கக்கட்ட அறிகுறிகளைப் பொருட்படுத்தாமல் இருப்பது அல்லது தாமதமாக சிகிச்சைப் பெறுவது ஆகியவை உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று அவர் வலியுறுத்தினார்.

அதோடு, குடல் பகுதியில் ஏற்படும் அடைப்பு, செரிமானக் கழிவுகள், கிருமி தொற்று, குடலினுள் உருவாகும் வீக்கம் அல்லது Parasites போன்ற காரணங்களினாலும், இந்நோய் ஏற்படுவதாக டாக்டர் கோமதி கூறினார்.  

இதனிடையே, உடலில் ஏற்படும் அசாதாரண மாற்றங்களை அலட்சியமாக எண்ணாமல் முறையான மருத்துவ ஆலோசனை பெறுவது பாதுகாப்பிற்கு மட்டுமல்ல விரைவாக குணமடைவதற்கும் வழிவகுக்கும் என்று அவர் அறிவுறுத்தினார்.

APPENDICITIS நோய் குறித்த விரிவான தகவல்களைப் பெற பெர்னாமா தொடர்புக் கொண்ட போது டாக்டர் கோமதி அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)