சிங்கப்பூர், மே 08 (பெர்னாமா) -- சிங்கப்பூரில், கொடிய ஹன்டா நச்சுயுரி எனும் கிருமி பரவலுடன் ஒரு சொகுசு கப்பலில் பயணம் செய்த இருவரை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்து வருவதாக அந்நாட்டின் தொற்றுநோய் கட்டுப்பாட்டு அமைப்பு CDA தெரிவித்துள்ளது.
அக்கிருமி மேலும் பரவுவதைத் தடுப்பதற்காக, உலகெங்கிலும் உள்ள நாடுகள், ஹன்டா நச்சுயுரி பாதிப்புக்குள்ளான கப்பலில் உள்ள பயணிகளைக் கண்காணித்து வருகின்றன.
MV Hondius எனும் கப்பலில் ஏற்பட்ட நோய்ப் பரவலில், நெதர்லாந்து தம்பதியினர் மற்றும் ஒரு ஜெர்மனியர் என மூவர் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளையில், எட்டு பேருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
எலிகள், அணில்கள் போன்ற பிராணிகள் மூலம் பரவும் ஓர் ஆபத்தான
கிருமியான ஹன்டா நச்சுயிரி பொதுவாக அரிதான சந்தர்ப்பங்களில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடும்.
சிங்கப்பூரைச் சேர்ந்த 67 மற்றும் 65 வயதான இரு ஆண்கள், தேசிய தொற்று நோய்கள் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் முதலாம் தேதி அர்ஜெண்டினாவின் Ushuaia துறைமுகத்திலிருந்து புறப்பட்ட MV Hondius கப்பலில் அவர்கள் பயணம் செய்ததாக CDA அறிக்கை ஒன்றின் வழியாக தெரிவித்துள்ளது.
இதனால், தற்போது சிங்கப்பூர் பொதுமக்களுக்கு அதன் ஆபத்து குறைவாகவே உள்ளதால் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் CDA தெரிவித்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)