மொனாக்கோ, 08 ஜூன் (பெர்னாமா) -- ஃபோர்முலா ஓன் முன்னிலை வீரரான கிமி அன்டோனெல்லி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மொனாக்கோ கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வெற்றி பெற்று, தனது ஐந்தாவது தொடர் வெற்றியைப் பதிவுசெய்து சாதனைப் படைத்துள்ளார்.
அந்த மெர்சிடிஸ் கார் பந்தய வீரரின் இந்த வெற்றி, அவர் மொத்தமாக 156 புள்ளிகளைப் பெற்று, தரவரிசையில் தனது முதலிடத்தை மேலும் வலுப்படுத்த உதவியது.
முதல் இடத்தில் இருந்து பந்தயத்தைத் தொடங்கிய அன்டோனெல்லி, பந்தயம் ஆரம்பித்தது முதலே எளிதாக முன்னிலை வகிப்பதைக் காண முடிந்தது.
பந்தயம் முடிய 10 சுற்றுகள் இருந்த நிலையில், பந்தயத்தின் பிற்பகுதியில் சிவப்புக்கொடி காட்டப்பட்டதால், பந்தயம் நிறுத்தப்பட்டது.
ஃபெராரி பந்தய வீரரான சார்லஸ் லெக்லெர்க் சம்பந்தப்பட்ட விபத்தின் காரணமாக, இறுதி வளைவில் பந்தயப் பாதை சேதமடைந்ததைத் தொடர்ந்து, இப்போட்டி 40 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.
பந்தயம் மீண்டும் தொடங்கியதும், 19 வயதான அந்த வீரர் இறுதிவரை முன்னிலையில் இருந்து, Monaco வரலாற்றிலேயே மிக இளவயது வெற்றியாளர் ஆனார்.
இப்பந்தயத்தில், ஃபெராரி வீரர் லூயிஸ் ஹமில்டன் இரண்டாம் இடத்தையும், ரெட் புல் அணியின் பிரதிநிதி இசாக் ஹட்ஜார் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)