புத்ராஜெயா, 12 ஜூன் (பெர்னாமா) -- 1967-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம் துணை செக்ஷன் 44(6)-இன் கீழ் நிறுவனங்கள் அல்லது அமைப்புகளை உள்ளடக்கிய ஒப்புதலுக்கான அனைத்து புதிய விண்ணப்பங்களும் வரும் ஜூன் 15-ஆம் தேதி தொடங்கி e-Derma அமைப்பு மூலம் கட்டாயம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இலக்கவியல் சேவையை விரிவுபடுத்தி, வரி விலக்கு விண்ணப்பங்களை மதிப்பாய்வு செய்து அங்கீகரிக்கும் செயல்முறையின் செயல்திறனை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு இணங்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வருமான வரி வாரியம், எல்.எச்.டி.என் தெரிவித்தது.
e-Derma அமைப்பைப் பயன்படுத்துவதன் மூலம் எல்.எச்.டி.என் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமலும், ஆவணங்களை நேரடியாகச் சமர்ப்பிக்காமலும், எந்நேரத்திலும் இணையம் வழியாக விண்ணப்பங்களைச் செய்யலாம் என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவ்வாரியம் விவரித்தது.
1967-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம் துணை செக்ஷன் 44(6)-இன் கீழ் வரிப் பிரதிநிதிகள் அல்லது வரி முகவர்களை நியமிக்கும் நிதி அல்லது நிறுவன அமைப்புகள், ஒப்புதலுக்கான புதிய விண்ணப்பங்களுக்கு துணை ஆவணங்களுடன் கூடிய கைமுறைப் படிவங்களை இந்நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமானது என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், e-Derma அமைப்பு மூலமான விண்ணப்பங்கள் தொடர்புடைய பிரிவுகள் அடுத்த கட்டத்திற்கு விரிவுபடுத்தப்படும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)