பிரான்ஸ், ஜூன் 25 (பெர்னாமா) -- 2026 FIFA உலகக் கிண்ண காற்பந்தாட்டப் போட்டி.
இன்று காலை நடைபெற்ற சி குழுவுக்கான ஆட்டத்தில் பிரேசில், ஸ்காட்லாந்து அணியை 3-0 என்ற கோல்களில் தோற்கடித்தது.
முதல் பாதி ஆட்டத்தில் பிரேசிலின் வினிசியஸ் ஜூனியர் இரு கோல்களை அடித்து தமது அணியை முன்னணி வகிக்க செய்தார்.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் ஸ்காட்லாந்து சில முயற்சிகளை மேற்கொண்டாலும் 60-வது நிமிடத்தில் பிரேசில் தனது,
மூன்றாவது கோலை அடித்து வெற்றியை உறுதி செய்தது.
இந்த ஆட்டத்தில் பிரேசில் அணியின் பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டி, அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான நெய்மாரை மாற்று ஆட்டக்காரராக களம் இறக்கினர்.
இதன் மூலம் இத்தொடரில் நெய்மார் தமது முதல் ஆட்டத்தை பதிவு செய்தார்.
இதனிடையே, இன்று அதிகாலை நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் தென்கொரியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய தென்னாப்பிரிக்கா, வரலாற்றிலேயே முதன்முறையாக உலகக் கிண்ண காற்பந்தாட்டப் போட்டியின் KNOCK OUT சுற்றுக்குத் தகுதி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.
முதல் பாதி ஆட்டத்தில் எந்தவொரு கோலும் அடிக்கப்படாத நிலையில், இரண்டாம் பாதியின் 63-வது நிமிடத்தில் ஆட்டத்தின் ஒரே கோலை அடித்து சிறந்த 32 அணிகள் பங்கேற்கும் ஆட்டத்திற்கு தென்னாப்பிரிக்கா தேர்வாகியது.
அடுத்த ஆட்டத்தில், தென்னாப்பிரிக்கா கனடாவுடன் மோதவுள்ளது.
ஏ குழுவுக்கான மற்றோர் ஆட்டத்தில் மெக்சிகோ, செக் குடியரசை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
இதன் மூலம், குழு அளவில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற சாதனையோடு, மெக்சிகோ அடுத்த ஆட்டத்திற்கான தனது இடத்தை உறுதி செய்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)