கோலாலம்பூர், 27 ஜூன் (பெர்னாமா) -- இன்று அதிகாலை, டூத்தா-உலு கிள்ளான்-டியூக் நெடுஞ்சாலையின், ஜாலான் கூச்சிங்கிற்கு வெளியேறும் வழியில் நிகழ்ந்த சாலை விபத்தில் இருவர் தீயில் கருகி மாண்டனர்.
அவர்கள் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு தடம் புரண்டதை அடுத்து தீப்பற்றி எரிந்ததாக நம்பப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக அதிகாலை மணி 5.20 அளவில், தங்கள் தரப்புக்கு அவசர அழைப்பு கிடைத்ததாக, கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை JBPM- அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்துள்ளது.
ஜின்ஜாங் மற்றும் ஶ்ரீ ஹர்தாமாஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் குழு, மீட்புப் பணிகளுக்காக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக JBPM தனது அறிக்கையில் தெரிவித்தது.
சம்பவ இடத்துக்கு வந்தபோது, ஒரு கார் தீப்பற்றி எரிந்த நிலையில் இருந்ததையும், அந்தக் காருக்குள் மூவர் சிக்கியிருந்ததையும் தீயணைப்பு வீரர்கள் கண்டறிந்தனர்.
அதில் இருவரின் உடல் முழுவதும் கருகி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட வேளையில், மூன்றாவது நபர் உயிருடன் மீட்கப்பட்டு, அவரச சிகிச்சைக்காக மருத்துவப் பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
தீ விபத்திற்குமான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே, சிலாங்கூர் கிள்ளானில் உள்ள ஜாலான் செபாடு, சாலையில், வெள்ளிக்கிழமை போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் செலுத்தியதாக நம்பப்படும் ஒருவரின் வாகனம் மோதியதில், உணவு விநியோக வாகனத்தோடு சேர்ந்து மேலும் ஐந்து வாகனங்கள் சேதமடைந்தன.
காலை 11.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், முப்பது வயதுக்கு உட்பட்ட சந்தேக நபர் ஓட்டிய SUV ரக கார், Rantau Panjang பகுதியில் இருந்து Bandar Sultan Suleiman நோக்கி சென்று கொண்டிருந்ததாக Klang Utara மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ராம்சே எம்போல் தெரிவித்தார்.
சந்தேக நபரின் கார் எதிர் திசைப் பாதையில் நுழைந்து, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த உணவு விநியோகிப்பு வாகனம் உட்பட பல வாகனங்கள் மீது மோதியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தகவல் அறிந்த பொதுமக்கள் அருகிலுள்ள போலீஸ் நிலையத்திற்கு நேரில் சென்றோ அல்லது வடக்கு கிள்ளான் மாவட்ட போலீஸ் துறையின் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவு விசாரணை அதிகாரி சுரிஹான் சம்சுடினை 013-2082327 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவோ கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)