கோலாலம்பூர், 30 ஜூன் (பெர்னாமா) -- மனநலப் பிரச்சனை தற்போது உலகளாவிய சுகாதார சவாலாக மட்டுமின்றி, சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும் முக்கிய அம்சமாக உருவெடுத்துள்ளது.
வாழ்க்கை முறை மாற்றங்கள், வேலை மற்றும் கல்வி சுமைகள், சமூக அழுத்தங்கள் உட்பட பல்வேறு காரணங்களால் இளைஞர்கள் மத்தியில் மனநலப் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
எனவே, மனநலப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான விரிவான நடவடிக்கைகளையும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்வது அவசியம் என்கின்றார், மனநல ஆலோசகர் தேவி வெனாஷினி முருகேஷ்.
மக்கள், குறிப்பாக 16 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதினர் மத்தியில், கடந்த 2019-ஆம் ஆண்டு பதிவான 2.3 விழுக்காடு மனநலப் பிரச்சனை சம்பவங்கள் 2023-ஆம் ஆண்டில் 4.6 விழுக்காடாக உயர்ந்துள்ள நிலையில், அதன் மூலம் சுமார் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது ஒரு தனிநபரின் உடல்நலத்தை மட்டுமின்றி நாட்டின் உற்பத்தி திறன், தொழிலாளர் பங்களிப்பு மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சியிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துவதாக, தேவி வெனாஷினி முருகேஷ் கூறினார்.
அதோடு, 2019-ஆம் ஆண்டு 7.9 விழுக்காடாக இருந்த சிறார்களிடையிலான மனநலப் பாதிப்பு சம்பவங்கள் 2023-ஆம் ஆண்டில் 16.5 விழுக்காடு என இருமடங்கிற்கு அதிகரிப்பை எட்டியுள்ளது கவலையை ஏற்படுத்துவதாக அவர் கூறினார்.
''என்னைப் பொறுத்தவரை நான் ஒரு குடும்பத்தின் சூழலை விட கணவன் மனைவி இடையிலான உறவு எவ்வாறு உள்ளது என்பதைதான் கவனிப்பேன். காரணம், பள்ளி மற்றும் நண்பர்கள் ஆகியோரைக் கடந்து பிள்ளைகள் அதிக நேரத்தை வீட்டில் தான் செலவிடுகின்றனர். எனவே, பொற்றோர்களின் சண்டை மற்றும் மனக் கசப்புகளைப் பார்த்து வளரும் பிள்ளைகள் இம்மாதிரியான சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர்'', என்றார் அவர்.
மனநலப் பிரச்சனைகளை எதிர்நோக்கும் இளைஞர்களும் சிறார்களும் கல்வியில் கவனம் செலுத்த முடியாமை, கற்றல் திறன் குறைதல், தன்னம்பிக்கை இழப்பு, சமூக உறவுகளிலிருந்து விலகிச் செல்லுதல், தனிமையை நாடுதல், கோபம் அல்லது பதற்றம் போன்ற சிக்கல்களை எதிர்நோக்குவதாக அவர் கூறினார்.
இதனிடையே, சிறார்கள் மத்தியில் ஏற்படும் மனநலப் பிரச்சனைகளைக் கையாள்வது மருத்துவர்களின் பொறுப்பு மட்டுமல்ல, மாறாக குடும்பம், பள்ளி மற்றும் சமூகம் ஆகியோர் இணைந்து முன்னெடுக்க வேண்டிய கூட்டுப் பொறுப்பாகும் என்று அவர் வலியுறுத்தினார்.
பிள்ளைகளுக்கு சிறு வயதிலிருந்தே மனநலனின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், மன உளைச்சலை வெளிப்படுத்துவதற்கான பாதுகாப்பான சூழலையும் பெற்றோர்கள் உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்று தேவி வெனாஷினி அறிவுறுத்தினார்.
மக்கள் மத்தியில் தொடர்ந்து அதிகரித்து வரும் மனநலப் பிரச்சனைகள், 2030-ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரத்தில் சுமார் ஈராயிரத்து 530 கோடி ரிங்கிட் வரை இழப்பை ஏற்படுத்தக்கூடிய அபாயம் இருப்பதாக, அண்மையில் மலேசிய நாடாளுமன்றத்தின் சுகாதார சிறப்புத் தேர்வு செயற்குழுவின் தலைவர் சுஹைசான் பின் கயியாட் தெரிவித்திருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)