Ad Banner
Ad Banner
Ad Banner
 அரசியல்

புக்கிட் கெப்போங்கில் மக்களின் பிரச்சனைகளைத் தீர்வுக் காண களம் இறங்கிய பி.எச் வேட்பாளர்

27/06/2026 08:27 PM

பாகோ, ஜூன் 27 (பெர்னாமா) -- புக்கிட் கெப்போங் தொகுதியில் ஏறக்குறைய 37 விழுக்காட்டினர் வாக்காளர்களாக உள்ளனர்.

வேலை வாய்ப்புகள், வீட்டு வசதிகள், வளர்ச்சி திட்டங்கள் உட்பட பல்வேறு பிரச்சனைகளை இத்தொகுதி மக்கள் எதிர்நோக்கி வரும் நிலையில், அவற்றுக்குத் தீர்வுக் காணும் நோக்கத்துடன் நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் சி. சுப்ரமணி களம் இறக்கியிருப்பதாக சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்தார்.

''ஆக, நமது வேட்பாளர் அவர் நிச்சயமாக வெற்றிப் பெறுவார். இத்தகையை குறைகளை எல்லாம் சட்டமன்றத்தில் பேசி, மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வார். அதற்கு உறுதி எடுத்திருக்கிறார்,'' என்றார் அவர்.

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமைத்துவத்தில் வெள்ள நிவாரணத் திட்டம், ஈ.டி.எஸ், ஆர்.டி.எஸ் உட்பட பல உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ஜோகூரில் பல மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்பட்டிருப்பதை யுனேஸ்வரன் நினைவூட்டினார்.

ஜோகூரின் வடக்கு பகுதிகளின் முன்னேற்றங்களிலும் நம்பிக்கை கூட்டணி கவனம் செலுத்தி வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.

இன்று, புக்கிட் கெப்போங் மாநில சட்டமன்றத் தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கல் செயல்முறை நிறைவடைந்த பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்தபோது, யுனேஸ்வரன் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

இத்தேர்தலில் புக்கிட் கெப்போங் சட்டமன்றத் தொகுதியில் நம்பிக்கைக் கூட்டணி, தேசிய முன்னணி மற்றும் பெரிகாத்தான் நேஷனல் ஆகிய மூன்று கட்சிகளின் வேட்பாளர்களிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், இத்தொகுதியில் தாம் வெற்றி பெற்றால், மிகவும் பின்தங்கியதாகக் கருதப்படும் அத்தொகுதியின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்த உதவுவதே தனது முக்கிய நோக்கமாக இருக்கும் என்று அவர் கூறினார்.

"முதல் பிரச்சினை, உதாரணமாக, இரவில் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்வதற்கு மிகவும் இருளாக இருக்கிறது. சாலையில் விளக்குகள் இல்லை. இரண்டாவது பிரச்சினை என்னவென்றால், புக்கிட் கெப்போங் பகுதியில் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே கலைக்கூடங்கள் உள்ளன. ஆனால், இதுவரை அங்கு எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. மக்கள் அதை ஒரு முக்கிய சுற்றுலாப் பகுதி என்று சொல்கிறார்கள். ஆனால் அது வளர்ச்சி அடையவில்லை. நான் வெற்றி பெற்றால், அதை ஒரு வளர்ச்சிகண்ட சுற்றுலாப் பகுதியாக மாற்ற முயற்சிக்குமாறு மக்கள் என்னிடம் கேட்கிறார்கள்,'' என்றார் அவர்.

தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்த பிறகு ஊடகங்களைச் சந்தித்தபோது சுப்ரமணி அவ்வாறு கூறினார்.

- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)