உலகம்

அடுத்த இரண்டு வாரங்களில் கொவிட்19 சம்பவங்களின் எண்ணிக்கை 20 கோடியைத் தாண்டும் - உலக சுகாதார நிறுவனம்

31/07/2021 08:14 PM

ஜெனிவா, 31 ஜூலை (பெர்னாமா) -- தற்போது அதிவேகமாகப் பரவி வரும் டெல்டா உருமாறிய தொற்றினால் உலக நாடுகளில் பதிவு செய்யப்படும் கொவிட்-19 சம்பவங்கள் கணிசமாக உயர்ந்துள்ளன.

கடந்த ஒரே வாரத்தில் மட்டும், உலகளவில் 40 லட்சம் கொவிட்-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அடுத்த இரண்டு வாரங்களில் அந்த எண்ணிக்கை 20 கோடியைத் தாண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருக்கிறது.

''சராசரியாக, உலக சுகாதார நிறுவனத்தின் ஆறு பகுதிகளில், கடந்த நான்கு வாரங்களில் தொற்றுநோய் சம்பவங்கள் 80 விழுக்காடு அல்லது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளன. ஆப்பிரிக்காவில், அதே காலகட்டத்தில் இறப்புகள் 80 விழுக்காடு அதிகரித்துள்ளன. இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக டெல்டா உருமாறிய தொற்று விளங்குகிறது,'' என்று உலக சுகாதார நிறுவனத் தலைவர் தெட்ரோஸ் அதானோம் கெப்ரியெசுஸ் கூறினார்.

மேலும், தற்போது அதிவேகமாகப் பரவி வரும் டெல்டா உருமாறிய தொற்றினால், பெருந்தொற்று பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, உலக நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் இழக்க நேரிடலாம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

இதுவரை, 132 நாடுகளில் டெல்டா தொற்று அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. காலப்போக்கில் கொவிட்-19 நச்சுயிரி உருமாறி, அதிக ஆற்றல் படைத்த தொற்றுகளாக உருவெடுக்கின்றன.

டெல்டா தொற்று சம்பவங்களைக் குறைப்பதற்கு, தடுப்பூசி செலுத்திக் கொள்வதே சிறந்த வழி என்றும் உலக சுகாதார நிறுவனம் மீண்டும் அறிவுறுத்தியிருக்கிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)