இஸ்லாமாபாத், 28 மே (பெர்னாமா) -- பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை லிட்டருக்கு 30 ரூபாய் உயர்த்தப்படுவதாக செபாஸ் ஹாரிப் அரசாங்கம் அறிவித்துள்ளது.
பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்துவதைத் தவிர அரசாங்கத்திற்கு வேறு வழியில்லை என்று பாகிஸ்தானின் நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் கூறியுள்ளார்.
விலை உயர்த்தப்பட்ட பிறகும், அரசாங்கம் டீசலுக்கு லிட்டருக்கு 56 ரூபாய் இழப்பை சந்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 179 ரூபாய் 86 காசுகளாக விற்பனையாகிறது.
இந்த அறிவிப்பினால், அந்நாட்டு மக்கள் அதிருப்தி அடைந்து தங்களின் ஆட்சேபத்தை பல இடங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்நாட்டில், எரிபொருள் விலை மற்றும் மின் கட்டணங்கள் வரலாறு காணாத அளவில் உச்சத்தில் இருக்கின்ற நிலையில், தற்போதைய இந்த விலை உயர்வுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானை ஆளும் மோசடி கும்பலால் நாடு பெரும் பணவீக்கத்தை சந்திக்கும் என்று அவர் எச்சரித்திருக்கின்றார்.
ரஷ்யாவுடன் 30 விழுக்காடு மலிவான விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி ஒப்பந்தத்தை தமது அரசு மேற்கொண்டதாகவும், ஆனால் அரசாங்கம் அதை தொடரவில்லை என்றும் இம்ரான் கான் சாடியுள்ளார்.
-- பெர்னாமா
© 2022 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை