டெங்கில், 2 ஜூலை (பெர்னாமா) -- வாகனங்களின் வார்ப்பட்டைகள் நல்ல நிலையில் உள்ளதா மற்றும் முழுமையாக செயல்படுகின்றனவா என்பதை உறுதி செய்யத் தவறினால், சாலைப் போக்குவரத்துத் துறை, ஜே.பிஜே விரைவுப் பேருந்து மற்றும் சுற்றுலா பேருந்து நிறுவனங்களுக்கு எச்சரிக்கை அறிவிக்கைகள் அனுப்புவதோடு அபராதமும் விதிக்கும்.
வாகனங்களின் வார்ப்பட்டைகள் அணியும் விதிமுறைப் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று சிலாங்கூர் மாநில ஜே.பி.ஜே இயக்குநர் அஸ்ரின் போர்ஹான் தெரிவித்தார்.
''நாங்கள் சோதனை செய்யும் போது, வார்ப்பட்டை சேதமடைந்திருப்பதைக் கண்டறிந்தால் உடனடியாக பழுதுபார்க்கும்படி சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அறிவுறுத்துவோம். மேலும், அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை அறிவிக்கையை வழங்கி நாங்கள் அபராதமும் விதிப்போம்,'' என்றார் அவர்.
இன்று, டெங்கில் ஓய்வெடுக்கும் பகுதியில் வடக்கு நோக்கிச் செல்லும் விரைவு மற்றும் சுற்றுலாப் பேருந்துகளில் வார்ப்பட்டை அணிவதற்கான சிறப்பு சோதனை நடவடிக்கையின்போது அஸ்ரின் இவ்வாறு கூறினார்.
ஜனவரி 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு பயன்படுத்தப்படும் பேருந்துகள் உட்பட அனைத்து பேருந்துகளிலும் வார்ப்பட்டை பொருத்தப்பட்டிருப்பது கட்டாயமாகும்.
அந்த விதிமுறையை மீறுபவர்களிடம் தங்கள் தரப்பு சமரசம் காணாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)