அரசியல்

வாழ்க்கை செலவினங்களுக்கு தீர்வு காண்பதே முதல் கடமை - அன்வார் சூளுரை

25/11/2022 06:38 PM

புத்ராஜெயா, 25 நவம்பர் (பெர்னாமா) -- தற்போது மக்கள் சந்தித்துவரும் சுமையைக் குறைக்கும் நோக்கத்தில் அதிகரித்துவரும் வாழ்க்கை செலவினங்களுக்கு தீர்வு காண்பதே, தமது தலைமையிலான ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் முன்னுரிமை ஆகும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்தார்.

பொருட்களின் விலை உட்பட வாழ்க்கை செலவினப் பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்கு, சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் துறையுடன் வரும் திங்கட்கிழமைக்குள் சந்திப்பு ஒன்று நடத்தப்படும் என்றும் அன்வார் தெரிவித்தார்.

''மக்களின் வாழ்க்கைச் செலவினம், அதாவது, மக்களின் வாழ்க்கைக்கு சுமையை ஏற்படுத்தி நெருக்குதல் அளிக்கும் பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்,'' என்றார் அவர்.

இன்று புத்ராஜெயா பெர்டானா புத்ராவில் தமது முதல் நாள் பணியைத் தொடங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார் அவ்வாறு கூறினார்.

அதோடு, தமது தலைமைத்துவம் முழுவதிலும் அரசு ஊழியர்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

''அமைச்சரவையை அமைப்பது, மற்ற விவகாரங்கள் உரிய நேரத்தில் செய்யப்படும். ஆனால், மலேசிய தேசத்தின் நற்பெயரை நிலைநிறுத்தவும், மக்களின் நலனைக் காப்பதற்கானக வலிமையை வளர்க்கவும், அரசு ஊழியர்கள் தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்க அழைக்கிறேன்,'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)