பொது

இந்தியர்களின் ஏற்றத்திற்கு அன்வார் புதிய விடியலாக இருப்பார் - பொதுமக்கள் நம்பிக்கை

25/11/2022 08:18 PM

பிரிக்பீல்ட்ஸ், 25 நவம்பர் (பெர்னாமா) -- ஈராயிரத்தாம் ஆண்டு முதல் பிரதமராக வேண்டும் என்ற டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் கனவு, காலம் கடந்து தற்போது நனவாகி இருப்பது நாட்டு மக்களை உச்சி குளிர வைத்திருக்கிறது. 

தமது நாற்பது ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் புதுமை விரும்பியாகவும் புரட்சியாளராகவும் எளிமைக் குணமிக்க தலைவராகவும் விளங்கிய இவரின் கனீர் குரல், இனிவரும் காலங்களில் நாட்டின் மேம்பாடு, மக்களின் வாழ்வாதார முன்னேற்றம், ஊழலற்ற அரசாங்கம் ஆகியவற்றின் மாற்றத்திற்காக ஒலிக்க வேண்டும் என்பது இந்தியர்களின் தார்மீக எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

கடந்த 2002ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் தேதி, நாட்டின் நான்காவது பிரதமராக இருந்த துன் மகாதீர் பதவி விலகுவதாக அம்னோ பேரவையில் அறிவித்திருந்த வேளையில், அவருக்குப் பிறகு ஐந்தாவது பிரதமராக டத்தோ ஶ்ரீ அன்வார் அப்பதவியை ஏற்றிருக்க வேண்டும்.

ஆனால், அந்த சமயத்தில் சந்தர்ப்ப சூழ்நிலை அன்வாருக்கு எதிராக இருந்ததால் அந்த வாய்ப்பானது அவரின் கை நழுவிப் போனது.

பொறுத்தார் பூமி ஆழ்வார் என்பதற்கு ஏற்ப பொறுமையோடு காத்திருந்த அன்வாருக்கு இன்று நாட்டை ஆளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த வாய்ப்பினை நன்முறையில் பயன்படுத்திக் கொண்டு தேர்தல் கொள்கை அறிக்கையில் தாம் கூறிய வாக்குறுதிகளை ஒன்றன் பின் ஒன்றாக அவர் நிறைவேற்றினால் அடுத்த சில ஆண்டுகளில் தொழில்நுட்பம், பொருளாதாரம், பங்குச் சந்தை ஆகியவற்றில் மற்ற நாட்டுகளுக்கு ஈடாக மலேசியாவும் வளர்ச்சி பெறும் என்று சிலர் தங்களின் எதிர்பார்ப்பினைத் தெரிவித்தனர்.

''நாட்டின் உற்பத்தித் திறன் அதிகரிக்க வேண்டும். பெரும்பாலான அடிப்படைப் பொருட்கள் உள்நாட்டிலே அதிகம் உற்பத்தி செய்தால் அத்தியாவசியப் பொருட்கள் மிகக் குறைவான விலையில் வாங்குவதற்கு வாய்ப்புள்ளது. இது மற்றவர்களைக் காட்டிலும் பி40 மக்களுக்குப் பொருளாதார நிதிச்சுமையைக் குறைக்கும்,'' என்று ஆனந்தன் லெட்சுமணன்.

''நான் இரண்டு வருடமாக இங்கு சிறுவியாபாரம் செய்து வருகிறேன். கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகத்திடம் வியாபார உரிமத்திற்காக பல முறை விண்ணப்பித்திருந்தும் இன்னும் கிடைக்காமல் உள்ளது. டத்தோ ஶ்ரீ அன்வார் தலைமைத்துவத்தில் எங்களைப் போன்ற சிறு வியாபாரிகளின் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும்,'' என்று பத்மினி கிருஷ்ணன். 

அதேவேளையில், அன்வார் எதிர்க்கட்சி தலைவராக இருந்தது முதல்  இன்று நாட்டின்  பிரதமராக இருக்கும்வரை அவருக்கு வற்றாத ஆதரவை பல்வேறு வகையில் வழங்கி வரும் இந்தியர்களின் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு பல்வேறு ஆக்ககரமான திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் சிலர் கேட்டுக் கொண்டனர்.

''இந்தியர்களின் நலன் காக்கப்பட வேண்டும். அரசாங்கத்தின் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும். ஏனெனில் அதிகமான இளம் பட்டதாரிகள் தங்களின் திறமைக்கு ஏற்ற வாய்ப்பு அரசாங்கத்தில் கிடைக்காமல் தனியார் துறைகளில் வேலை செய்து வருவதாக மனோகரன் செல்வராஜும் நாகராணி சௌந்தரபாண்டியனும் தெரிவித்தனர்.

அதைத் தவிர்த்து, மூத்தகுடி மக்களுக்கான சமூகநல உதவிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு அமைப்பு உருவாக்கம், நிரந்தரக் குடியுரிமை, பி40 பட்டதாரி மாணவர்களுக்கான சிறப்பு உதவிகள், வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் போன்றவற்றில் அவர் கவனம் செலுத்த வேண்டும்.  

அதோடு, இளைஞர்களுக்கான சிறப்பு அட்டை, சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கான நிரந்தரத் தீர்வு, அரசாங்கத் துறையில் இந்தியர்களுக்கான கூடுதல் ஒதுக்கீடு போன்ற பல்வேறு எதிர்ப்பார்ப்புகளையும் அவர் கட்டம் கட்டமாக நிறைவேற்றுவார் என்று அவர்கள் நம்பிக்கைத் தெரிவித்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)