பொது

2 கோடியே 42 லட்சம் ரிங்கிட் நட்ட வழக்கில் ஒருவர் கைது

17/06/2024 06:10 PM

கோலாலம்பூர், 17 ஜூன் (பெர்னாமா) --  பல நிரந்தரச் சேமிப்புக் கணக்குகளில் இருந்து பணத்தை மீட்டு இரண்டு கோடியே 42 லட்சம் ரிங்கிட் நஷ்டத்தை ஏற்படுத்திய வழக்குத் தொடர்பில் மோசடி கும்பலைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த ஜூன் 13 ஆம் தேதி சபா, கோத்தா கினாபாலுவில் உள்ள ஒரு வங்கியின் பெண் ஊழியரை போலீஸார் கைது செய்ததைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை சபாவில்  40 வயதுடைய சம்பந்தப்பட்ட ஆடவர் கைது செய்யப்பட்டார்.

சம்பந்தப்பட்ட அந்நபர் இந்த வழக்கில் நேரடியாக தொடர்புடையவர் என்று நம்பப்படுவதாக புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ ஶ்ரீ முஹமட் ரம்லி யூசோப் கூறினார்.

இதன் தொடர்பில், இதுவரை இருவரை போலீசார் கைது செய்துள்ளதாகவும் நிரந்தரச் சேமிப்புக் கணக்கில் இருந்து பணம் மீட்கும் நடவடிக்கையில் இன்னும் பலர் ஈடுப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது என்றும் இன்று தொடர்பு கொண்டபோது அவர் தெரிவித்தார்.

வங்கியில் பணிபுரிபுவர்களின் ஒத்துழைப்புடன் மட்டுமே பணத்தை மீட்க முடியும் என்பதால், வங்கிக்கு உள்ளே மற்றும் வெளியே மோசடி கும்பலின் தலையீடு இருப்பது தங்கள் தரப்பு மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்ததாக முஹமட் ரம்லி கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502