பொது

இரயில் பெட்டிகள், அதன் இயந்திரங்களைப் பழுதுபார்க்கும் நடவடிக்கையில் இந்தியரின் பங்களிப்பு

17/06/2024 08:19 PM

ஈப்போ, 17ஜுன் (பெர்னாமா) -- மோட்டார் சைக்கிள், கார் மற்றும் லாரிகளை பழுதுபார்ப்பது அல்லது பராமரிப்பது வழக்கமான நடவடிக்கையாகும்.

அதில், இரயில் பெட்டிகள் அல்லது அதன் இயந்திரங்களை பழுதுபார்ப்பது, அல்லது பராமரிக்கும் நடவடிக்கையை காண்பது மிகவும் அரிதான ஒன்று.

அதிகமானோர் கண்டிராத இந்நடவடிக்கை, ஈப்போ, ஜாலான் துன் அப்துல் ரசாக்கில் அமைந்துள்ள, உள்ளூர் நிறுவனத்திற்குச் சொந்தமான பட்டறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நடவடிக்கையில், இந்தியரின் பங்கும் அளிப்பரியதாக உள்ளது.

வாடிக்கையாளர்கள் அனுப்பும் ரயில் பெட்டிகள் மற்றும் இயந்திரங்களைப் பழுதுபார்க்கும் நடவடிக்கையை பட்டறையின் உரிமையாளரான ''Railfreight Engineering and Logistic'' நிறுவனம் செயல்படுத்தி வருகின்றது.

55 அடி நீளமும், 60 டன் எடையும் கொண்ட ரயில் பெட்டிகளைப் பழுதுபார்க்கும் மற்றும் பராமரிக்கும் பணிகளை தமது திறமையான பொறியாளர்களுடன் இணைந்து மேற்கொள்வதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி எஸ்.கணேசன் தெரிவித்தார்.

தமது தந்தை டத்தோ எஸ். சுப்பையா இறந்தப் பின்னர், கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கி முழுமையாக இந்த வர்த்தகத்தை தாம் ஏற்று நடத்தி வருவதாக அவர் கூறினார்.

தமது குடும்பத்தில், நான்காம் தலைமுறையாக ரயில் தொடர்பான துறையில் பணிப்புரியும் எஸ்.கணேசன் தனியார் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பட்டம் பெற்றுள்ளார்.

ஈப்போவை பூர்வீகமாகக் கொண்ட இவர், விபத்துகள் காரணமாக சிறிய அல்லது கடுமையாகச் சேதமடைந்த ரயில் பெட்டிகளைப் பழுதுபார்க்கும் பணிகளைச் சீராக செய்யும் திறமைக் கொண்டவர்.

சாலைகள் மற்றும் தண்டவாளங்களில் செல்லக்கூடிய இயந்திரங்களை உற்பத்தி செய்யத் தொடங்குவதன் வழி, வெளிநாட்டிலிருந்து வரும் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் தளவாடத் துறையில் வளர்ச்சியடைந்த தொழில்நுட்பத்தை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தமது நிறுவனம் மேற்கொண்டு வருவதாகவும் கணேசன் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)