பொது

இணைய மோசடி: 77,000 ரிங்கிட்டை இழந்தார் சமூக சேவை அதிகாரி 

28/06/2024 08:27 PM

கோலாலம்பூர் , 28 ஜூன் (பெர்னாமா) -- பேராக், தைப்பிங்கில் இணைய மோசடியினால் ஓர் அரசு சாரா நிறுவனத்தின் சமூக சேவை அதிகாரி ஒருவர் கடந்த ஜூன் 12ஆம் தேதி ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 700 ரிங்கிட் இழப்பை எதிர்நோக்கினார்.

72 வயது முதியவருக்கு மதியம் மணி 2.30க்கு தொடர்பு அமைச்சின் பிரதிநிதி என்று கூறி மர்ம நபரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் அவரை ஈப்போ மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு வருமாறும் அந்நபர் கேட்டுக் கொண்டதாகவும் மாநில போலீஸ் தலைவர் DATUK SERI MOHD YUSRI HASSAN BASRI தெரிவித்தார்.

தம்மால் தற்போது ஈப்போ போலீஸ் தலைமையத்திற்கு வர முடியாது என்று கூறிய அந்த முதியவர், தமது அழைப்பை போலீசுக்கு இணைப்பதற்கு முன்னதாக, தாம் எவ்வித சட்டவிரோத நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் டத்தோ ஶ்ரீ முஹமட் யுஸ்ரி ஹசான் பஸ்ரி தெரிவித்தார்.

அப்போது அவரிடம் பேசிய இரண்டாவது சந்தேக நபர், அவ்விவகாரத்தைக் களைய தம்மால் உதவ முடியும் என்று கூறியதோடு, அப்பெரியவரின் வங்கி அட்டை எண் மற்றும் வங்கி அட்டையின் கடவு எண் ஆகியவற்றை வினவியுள்ளார்.

பதற்றமும் பயமும் நிறைந்த அப்பெரியவர் அவ்வாடவர் சொன்னதைப் பின்பற்றி அவ்விரு எண்களையும் வழங்கியுள்ளார்

பாதிக்கப்பட்ட நபர் அன்றிரவு தைப்பிங்கில் உள்ள வங்கிக்குச் சென்று தமது வங்கிக் கணக்கை சரிபார்த்தபோது, அறியாதப் பெயர்களைக் கொண்ட வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் சந்தேகத்திற்கிடமான ஐந்து பரிவர்த்தனைகள் நடந்துள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மேலும், அவரின் வங்கிக் கணக்கிலிருந்து  ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 700 ரிங்கிட் ரொக்கமும் குறைந்துள்ளதாக முஹமட் யுஸ்ரி கூறினார். 

அதைத் தொடர்ந்து தம்மிடம் பேசிய அந்த இரண்டாவது சந்தேக நபரை தொடர்பு கொள்ள முயன்றபோது அவரிடமிருந்து எவ்வித பதிலும் வராத நிலையில் தாம் ஏமாற்றப்பட்டதை முதியவர் உணர்ந்ததாக அவர் தெரிவித்தார்.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 420-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுவதாகக் கூறிய, அண்மைய காலமாக அதிகரித்து வரும் மோசடிகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]