அரசியல்

சீரான வானிலையால் காலையிலே வாக்காளர்கள் விரைந்தனர்

06/07/2024 05:57 PM

நிபோங் திபால், 06 ஜூலை (பெர்னாமா) -- சுங்கைப் பக்காப்  சட்டமன்ற இடைத் தேர்தல்... 

சீரான வானிலை காரணமாக அத்தொகுதி வாக்காளர்கள் இன்று காலையிலேயே விரைந்து தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். 

காலை 8 மணிக்கு வாக்குச்சாவடிகள் திறப்பதற்கு முன்னரே வாக்காளர்கள் காலை 7 மணி தொடங்கி வாக்களிப்பு மையங்களில் வரிசையில் நிற்க தொடங்கினர்.

பிற்பகலில் அல்லது மாலையில் மழை பெய்வதால் உறுதியற்ற வானிலையைக் கருத்தில் கொண்டே வாக்காளர்கள் காலையிலேயே தங்கள் கடமையை நிறைவேற்றும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டனர். 

இடைத்தேர்தலுக்கான ஒன்பது வாக்களிப்பு மையங்களில்,ஒன்றான சிம்பாங் அம்பாட்டில் உள்ள பண்டார் தாசேக் முத்தியாரா இடைநிலைப் பள்ளியின் வாக்களிப்பு நிலவரங்களைப் பெர்னாமா கண்டறிந்தது. 

பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த போலீசார் அப்பள்ளியில் வாசலில் பணியில் ஈடுப்பட்டிருந்தனர். 

பொதுமக்கள் வாக்களிப்பதை எளிதாக்கும் வகையில், வாக்காளர் பதிவேட்டைச் சரிபார்க்க தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளும் முகப்புகளில் நிறுத்தப்பட்டிருந்தனர். 

முதியவர்கள் மற்றும் சுகாதாரப் பிரச்சனைகளைக் கொண்ட வாக்காளர்களின் பயன்பாட்டிற்காக, சக்கர நாற்காலிகளும் தயார் நிலையில் இருந்தன.

கடந்த மே 24-ஆம் தேதி அத்தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நோர் சம்ரி லத்திஃப் காலமானதைத் தொடர்ந்து சுங்கை பக்காப்பில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)