உலகம்

பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தல்;  இடதுசாரி கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி

08/07/2024 04:58 PM

பிரான்ஸ், 08 ஜூலை (பெர்னாமா) -- பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரி கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அங்கு கூட்டணி ஆட்சி அமையவுள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரோனை பதவி விலகுமாறு அல்லது தமது புதிய மக்கள் முன்னணி கூட்டணியில் இருந்து ஒரு புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்குமாறு, இடதுசாரிக் கட்சித் தலைவர் Jean-Luc Mélenchon அழைப்பு விடுத்துள்ளார்.

பிரான்சில் ஜூன் 30 மற்றும் ஜூலை 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.

அதில், 577 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இறுதிகட்ட வாக்களிப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின் படி இடதுசாரி கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.

அதைத் தொடர்ந்து, அதிபர் இம்மானுவேலின் centrists கூட்டணி இரண்டாவது இடத்திலும், தீவிர வலதுசாரிகள் கூட்டணி மூன்றாவது இடத்திலும் உள்ளன.

தீவிர வலதுசாரிகள் கூட்டணி நாடாளுமன்றத்தில் வைத்திருக்கும் இடங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளனர்.

எனினும், கடந்த வாரம் முதல் சுற்று வாக்கெடுப்பில் கிடைத்த திடமான முடிவுகளைக் காட்டிலும் இம்முறை குறைந்துவிட்டது.

மற்றொரு நிலவரத்தில், பிரான்ஸ் பொது தேர்தலில் இடதுசாரி கூட்டணி கட்சி முன்னிலை வகிக்கத் தொடங்கியதைத் அடுத்து, அந்நாட்டு பிரதமர் GABRIEL ATTAL பதவி விலகவிருப்பதாக அறிவித்துள்ளார்.

இந்தப் பொதுத் தேர்தலில் ஆட்சியமைக்க எந்தவொரு கட்சிக்கும் எளிய பெரும்பான்மை கிடைக்காததால், பாரிஸ் ஒலிம்பிக் போட்டி உட்பட தேவைப்படும் வரையில் தாம் தமது பிரதமர் பதவியைத் தொடரவிருப்பதாக GABRIEL ATTAL தெரிவித்தார்.

புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கும், ஆட்சி அமைப்பதற்கும் பல வாரங்கள் தீவிர அரசியல் பேச்சுவார்த்தைகள் நடப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இத்தேர்தலில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், Macron தோல்வியைத் தழுவியுள்ளார்.
 

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)