பொது

இணையப் பகடிவதை: சட்டத் திருத்தப் பரிந்துரை ஆராயப்படுகிறது

16/07/2024 03:30 PM

கோலாலம்பூர், 16 ஜூலை (பெர்னாமா) -- இணையப் பகடிவதை குற்றத்திற்காக குறிப்பிட்ட மற்றும் சிறப்பு விதிகளை உருவாக்குவதன் மூலம், குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்யும் பரிந்துரையை பிரதமர் துறையின் கீழ் செயல்படும் சட்ட விவகாரங்களுக்கான பிரிவு ஆராய்ந்து வருகிறது.

தற்போது அமலாக்கத்தில் உள்ள சட்ட விதிகளில் பலவீனங்கள் இருப்பதை சட்டம் மற்றும் கழகச் சீர்த்திருத்தத்திற்கான அமைச்சர் டத்தோ ஶ்ரீ அசாலினா ஒத்மான் ஒப்புக்கொண்டார்.

அதோடு, பொதுவான சட்ட விதிகளினால், இணையப் பகடிவதை குற்றம் சம்பந்தப்பட்ட விசாரணை மற்றும் வழக்குத் தொடரும் செயல்முறை கடினமாவதையும் அவர் மறுக்கவில்லை.

சட்டம் 574 அல்லது குற்றவியல் சட்டம், சட்டம் 588 அல்லது 1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம், சட்டம் 563 அல்லது 1997-ஆம் ஆண்டு கணினி குற்றவியல் சட்டம் உட்பட நடப்பில் இருக்கும் சில சட்டங்கள் பொதுவானதே தவிர, இணையப் பகடிவதைக்கான குறிப்பிட்ட மற்றும் உறுதியான விதிகள் இல்லை என்றும், இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அசாலினா தெரிவித்தார்.

இதனால், இணையப் பகடிவதைக் குற்றத்திற்கு சட்ட அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வழக்கு தொடுப்பதில் சிரமத்தை எதிர்நோக்கும் சூழல் ஏற்படுகிறது.

அதனால், மக்களும் இணைய பகடிவதையை மிகவும் சாதாரணமாகப் பார்ப்பதால், அது தொடர்ந்து பெரியளவில் பரவியும் வருவதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.

இணையப் பகடிவதை குற்றத்தின் விதிகள் திறம்பட செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் தேவைப்படும் திருத்தங்களைச் செய்வதற்கு, சட்ட விவகாரங்களுக்கான பிரிவு துல்லியமாக ஆராயும் என்றும் அசாலினா உத்தரவாதம் அளித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)