பொது

ஆடவரைக் கத்தியால் குத்தியதாக நம்பப்படும் நபருக்கு ஏழு நாள்கள் தடுப்புக் காவல்

16/07/2024 04:10 PM

கோத்தா பாரு, 16 ஜூலை (பெர்னாமா) -- மூன்று நாள்களுக்கு முன்னர் ஜாலான் வாக்காஃப் சிகுவில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் ஆடவர் ஒருவரை கத்தியால் குத்தியதாக நம்பப்படும் 47 வயதான நபருக்கு, ஏழு நாள்கள் தடுப்புக் காவல் உத்தரவை கோத்தா பாரு மஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று பிறப்பித்தது.

விசாரணைக்கு உதவும் பொருட்டு, இன்று தொடங்கி ஜூலை 22-ஆம் தேதி வரையில் தடுத்து வைப்பதற்கான உத்தரவை மஜிஸ்திரேட் அமின் ரஷிடி ரம்லி பிறப்பித்தார்.

இவ்வழக்கு குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை காலை மணி 10 அளவில், உதவி கோரி நபர் ஒருவரின் குரல் கேட்டதைத் தொடர்ந்து, அப்பகுதிக்குச் சென்ற பொதுமக்கள், அங்கு 30 வயதிற்குட்பட்ட ஆடவர் ஒருவர் கிடந்ததைக் கண்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இச்சம்பவத்தை, கோத்தா பாரு மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி முஹமட் ரொஸ்டி டாவுட் உறுதிப்படுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)