விளையாட்டு

மலேசிய கபடி அணியின் பயிற்சிகளுக்கு ஆதரவு தருவீர்

08/07/2024 05:09 PM

கோலாலம்பூர், 08 ஜூலை (பெர்னாமா) -- அடுத்த மாதம் ஆகஸ்ட் 17ஆம் தேதி தொடங்கி சரவாக், கூச்சிங்கில் நடைபெறவிருக்கும் சுக்மா விளையாட்டு போட்டிக்கு விளையாட்டாளர்கள் தயாராகி வருகின்றனர்.

அந்த வரிசையில், மலேசிய கபடி அணிக்கும் தீவிரமாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சுக்மாவைத் தவிர்த்து, இதர அனைத்துலக போட்டிகளிலும் கலந்து கொள்ளவிருக்கும் மலேசிய கபடி அணிக்கு, பயிற்சிகளை வழங்குவதற்கு அரசாங்கத்திடமிருந்து கூடுதல் ஆதரவு தேவைப்படுவதாக மலேசிய கபடி சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

மலேசியாவில் கபடி விளையாட்டில் இந்தியர்கள் மட்டுமின்றி மலாய்காரர்களும் சீனர்களும் ஆர்வத்துடன் கலந்து கொள்ளும் அளவிற்கு அவ்விளையாட்டு பிரபலமடைந்திருக்கின்றது.

சுக்மாவில் இடம்பெறுவதற்காக பல சவால்களைச் சந்தித்திருந்த காலங்கள் கடந்து, இன்றையக் காலக்கட்டத்தில் அனைத்துலக போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வெல்லும் அளவிற்கு மலேசிய கபடி அணி தகுதிப் பெற்றிருக்கின்றது.

எனினும், சமுதாயத்திற்கு மட்டுமல்லாது நாட்டிற்கும் பெருமைத் தேடித் தரும் குறிக்கோளுடன் செயல்படும் மலேசிய கபடி அணி, அனைத்துலக போட்டிகளுக்கான பயிற்சிகளைப் பெற அரசாங்கம் நிதியுதவி வழங்கினாலும் அது குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு மட்டுமே போதுமானதாக இருப்பதாக மலேசிய கபடி சங்கத்தின் பொது செயலாளர் பீட்டர் கோபி வருத்தம் தெரிவித்தார்.

''இரண்டு மாதம் மட்டும் பயிற்சிக்கு போதாது. ஆனால், அரசாங்கத்தின் நிதி இரண்டு மாதத்திற்குள் முடிந்துவிடுகின்றது. எதிர் அணியினர் கூடுதலாக பயிற்சி பெற்று வருவதால் நமக்கும் கூடுதல் பயிற்சி தேவைப்படுகிறது,'' என்றார் அவர்.

இதனிடையே, அரசாங்கம் மட்டுமல்லாது மிகப்பெரிய நிறுவனங்களும் மலேசிய கபடி அணிக்கு உதவ முன் வர வேண்டும் என்று பீட்டர் தமது எதிர்பார்ப்பை முன் வைத்தார்.

தற்போது இளைஞர்கள் கபடியில் கலந்து கொள்வதற்கு பெற்றோர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தங்களின் பிள்ளைகள் தவறான வழிக்குச் செல்லாமல் இதுபோன்ற விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதோடு, பெண்களும் குறிப்பாக மலாய்க்காரர்களும் இதில் கலந்து கொண்டு வெற்றிப் பெற்றிருந்த அனுபவங்களையும் பீட்டர் பெருமையாக கூறினார்.

எனவே, வெற்றியின் இலக்கை நோக்கிச் சென்றுக் கொண்டிக்கும் மலேசிய கபடி அணிக்கு அரசாங்கம் மற்றும் சமுதாயத்திலிருந்து போதுமான ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைத்தால் மேலும் பல வெற்றிகளைப் படைக்க வாய்ப்புள்ளது என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502