உலகம்

ரஷ்யாவுக்கு மோடி இரண்டு நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணம்

08/07/2024 05:49 PM

ரஷ்யா, 08 ஜூலை (பெர்னாமா) -- ரஷ்யாவின் உக்ரேன் மீதான படையெடுப்பிற்குப் பிறகு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக ரஷ்யாவுக்கு இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். 

ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையிலான நெருக்கடி மோசமடைந்து வரும் வேளையில், இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கு இருந்த நீண்டகால உறவில் கிக்கல் ஏற்பட்டது.

இதனால், ரஷ்யா இந்தியாவின் மிகப்பெரிய போட்டியாளரான சீனாவுடன் நெருக்கமாகி உள்ள நிலையில் தற்போது மோடியின் இப்பயணம் அமைந்துள்ளது.

இறுதியாக, கடந்த 2019ஆம் ஆண்டு  ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்த போது அதிபர் விளாடிமர் புதினை நரேந்திர மோடி விளாடிவோஸ்டாக் துறைமுகத்தில்  சந்தித்தார்.

அதன் பின்னர், 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உஸ்பாகிஸ்தானில்  நடைபெற்ற ஷாங்காய் நிறுவன ஒத்துழைப்பு உச்சநிலை மாநாட்டின்போது அவர்கள் நேரில் சந்தித்தனர்.

அதனைத் தொடர்ந்து, தற்போதைய இந்த இரண்டு நாட்கள் பயணத்தின்போது மோடி புதினைச் சந்திக்கவுள்ளார்.

இப்பயணத்தின்போது இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான உறவு மேலும் வலுவடையும் என்று மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில்  கிரேம்லின் உக்ரேனுக்கு துருப்புக்களை அனுப்பியதில் இருந்து மாஸ்கோவின் முக்கிய வர்த்தக பங்காளியாக புது டெல்லி உருவெடுத்தது.

அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் விதித்த பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து, சீனாவும் இந்தியாவும் ரஷ்யாவின் எண்ணெய்யை வாங்கும் முக்கிய நாடுகளாக மாறியுள்ளன

எனினும், உக்ரேனுடனான பகையினால், இந்தியாவின் முதன்மை போட்டியாளரான சீனாவுடன் ரஷ்யா நெருக்கமான உறவை வளர்த்துக் கொள்ளத் தொடங்கியுள்ளது.
 
-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)