உலகம்

ரஷ்ய அதிபரைச் சந்தித்தார் மோடி

09/07/2024 07:45 PM

மாஸ்கோ, 9 ஜூலை (பெர்னாமா) -- ரஷ்யாவிற்கு இரண்டு நாட்கள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, திங்கட்கிழமை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினைச் சந்தித்தார்.

இச்சந்திப்பு, மாஸ்கோவிற்கு வெளியில் உள்ள புதினின் அரசு இல்லத்தில் நடைபெற்றது.

இறுதியாக, 2019ஆம் ஆண்டில் மோடி ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

அதன் பின்னர், ரஷ்யாவின் உக்ரேன் மீதான படையெடுப்பிற்குப் பிறகு, மோடி ரஷ்யாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

இன்று, விளாடிமிர் புதினும் நரேந்திர மோடியும் கிரேம்லினில் பேச்சு வார்த்தை நடத்துவதோடு, அவர்கள் ஒன்றாக இரவு உணவு உண்ணவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின்போது, ​​இந்த ஆண்டு மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள மோடிக்கு புதின் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

அவருக்கு பதிலளித்த மோடி, தற்போதைய ஆட்சியில் நாட்டிற்காக இன்னும் கடினமாக உழைக்க உறுதி கொண்டுள்ளதாகக் கூறினார்.

''சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் என்பதே எனது கொள்கை. இந்திய மக்கள் இக்கொள்கைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளனர். மூன்றாவது தவணையில் நான் மும்மடங்கு கடினமாக உழைத்து நாட்டுக்காக இன்னும் சிறப்பாக பணியாற்ற முயற்சிக்க முடிவு செய்துள்ளேன்,'' என்று மோடி கூறினார்.

இச்சந்திப்பில், வர்த்தக மேம்பாடு குறிப்பாக இந்தியாவின் முக்கிய துறைமுகமான சென்னைக்கும் ரஷ்யாவின் தூர கிழக்கிற்கான நுழைவாயிலான விளாடிவோஸ்டாகிற்கும் இடையே ஒரு கடல் வழித்தடத்தை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)