உலகம்

அமெரிக்கா உட்பட நேட்டோ நாடுகள் உக்ரேனுக்கு வான் தற்காப்பு உபகரணங்களை அனுப்பும்

10/07/2024 07:37 PM

வாஷிங்டன், 10 ஜூலை (பெர்னாமா) -- அமெரிக்காவும், பிற நேட்டோ (NATO) நட்பு நாடுகளும் வரும் மாதங்களில் உக்ரேனுக்கு வான் தற்காப்பு உபகரணங்களை அனுப்பவுள்ளன. 

அவற்றில், ரஷ்யாவுடனான போரில் பயன்படுத்த கீவ்விற்கு பெரிதும் தேவைப்படும் குறைந்தது நான்கு சக்திவாய்ந்த பெட்ரோய்ட் ஏவுகணைகளும் அடங்கும் என்று அமெரிக்காவும் நேட்டோ நட்பு நாடுகளும் கூட்டு அறிக்கையின் வழி குறிப்பிட்டுள்ளன.

''இன்று நான் உக்ரேனுக்கான வான் பாதுகாப்பு உபகரணங்களின் வரலாற்றுப்பூர்வ நன்கொடையை அறிவிக்கிறேன். அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து, ருமேனியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் உக்ரேனுக்கு ஐந்து கூடுதல் வியூக வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கான உபகரணங்களை வழங்கவிருக்கின்றன. மேலும், வரும் மாதங்களில் அமெரிக்காவும் எங்களின் பங்காளிகளும் உக்ரேனுக்கு கூடுதல் உத்திசார்ந்த வான் பாதுகாப்பு அமைப்புகளையும் வழங்க உள்ளனர், '' என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார். 

வாஷிங்டனில், நேட்டோ உச்சநிலை மாநாட்டின் தொடக்க விழாவில் உரையாற்றிய ஜோ பைடன் அவ்வாறு குறிப்பிட்டார்.

நேட்டோ உருவாக்கப்பட்டபோது, 1949ஆம் ஆண்டில் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்தம் முதன்முதலில்  கையெழுத்திடப்பட்ட  மெலன் அரங்கில் உச்சிநிலை மாநாடு தொடக்கி வைக்கப்பட்ட போது பைடன் இந்த அறிவிப்பைச் செய்தார். 

மேலும், கூட்டணியின் முக்கியத்துவம் மற்றும் உக்ரேனுக்கு ஆதரவாக ஒன்றிணைவதற்கான அவசியம் போன்றவைக் குறித்து பைடனும் நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்கும் உரையாற்றினர்.

இதனிடையே, தமது நாட்டிற்கு எதிரான ரஷ்யானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கையை எடுக்க அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்காக உலகம் காத்திருக்க வேண்டியதில்லை என்று உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.

''நவம்பர் அல்லது வேறு எந்த மாதங்களுக்கும் காத்திருக்காமல் செயல்படுவதற்கான வலுவான முடிவுகளை எடுப்பதற்கான நேரம் இது. நாம் அனைவரும் ஒன்றாக வலுவாகவும் சமரசம் செய்யாமலும் இருக்க வேண்டும்,'' என்றார் அவர்.

நேட்டோ உச்சநிலை மாநாட்டின்போது தமது உரையில் ஜெலென்ஸ்கி அவ்வாறு தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் சமரசம் காணாதவராகவும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அவரது கூட்டத்திற்கு எதிராக சமரசம் செய்யாதவராகவும் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)