பொது

'டாய்ஷ்' பயங்கரவாத குழுவிற்கு ஆதரவளித்ததாக பெண் மீது இரு குற்றச்சாட்டு

21/07/2024 04:03 PM

சிகாமாட், 21 ஜூலை (பெர்னாமா) -- 'டாய்ஷ்' பயங்கரவாத குழுவிற்கு ஆதரவளித்ததோடு அவர்கள் தொடர்பிலான பொருட்களை வைத்திருந்ததாக இர்மா ஜுல்யாந்தி புவாங் என்ற இல்லதரசி ஒருவர் இன்று சிகாமாட் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

இருப்பினும், இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டு இருப்பதால் நீதிபதி ரஹிமா அப்துல் மாஜிட் முன்னிலையில் அப்பெண்மணி மீதான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அவரிடமிருந்தும் எவ்வித வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

Bunga Dahlia என்ற முகநூல் கணக்கு வாயிலாகவும் bungadahlia111 என்று டிக் டோக் மூலமாகவும் அப்பயங்கரவாத குழுவிற்கு சமூகவலைத்தளத்தில் ஆதரவு வழங்கியதாக இர்மா மீது முதல் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.   

கடந்த ஜூன் 28ஆம் தேதி காலை மணி 10.28 அளவில கோலாலம்பூரில் உள்ள பத்து மூடா போலீஸ் தடுப்பு மையத்தில் அவர் இச்செயலைப் புரிந்தது தெரிய வந்துள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் மற்றும் குற்றம் செய்ய பயன்படுத்தப்பட்ட அல்லது  அந்த நோக்கத்திலான எவ்வகை சொத்துகளும் பறிமுதல் செய்ய வகை செய்யும் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 130J உட்பிரிவு (1) மற்றும் (a)-வின் கீழ் அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இரண்டாவது குற்றச்சாட்டில், 'டாய்ஷ்'  பயங்கரவாத குழு தொடர்புடைய தகவல்களை தமது கைப்பேசியிலும் மடிக்கணினியிலும் வைத்திருந்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. 

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 130JB உட்பிரிவு (1) மற்றும் (a)-இன் கீழ் இரண்டாவது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கின் மறு செவிமடுப்பு செப்டம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)