பொது

ஹமாஸ் தலைவருக்கான பிரதமரின் இரங்கல் பதிவை மேத்தா நீக்கிய விவகாரம்; முழுமையான விளக்கம் தேவை

01/08/2024 05:14 PM

புத்ராஜெயா, 01 ஆகஸ்ட் (பெர்னாமா) -- ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே  மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் பதிவை சமூக ஊடகத்தள வழங்குநரான மேத்தா மீண்டும் நீக்கியிருப்பது தொடர்பில் அத்தரப்பிடமிருந்து முழுமையான விளக்கத்தை அரசாங்கம் கோரியுள்ளது.

இரண்டாவது முறையாக, மேத்தா தரப்பினால் மேற்கொள்ளப்பட அந்நடவடிக்கை வருந்தத்தக்கது என்று தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் சாடியிருக்கின்றார்.

''பிரதமரின் அதிகாரப்பூர்வ கணக்கில் பதிவேற்றப்படும் பதிவுகள் அல்லது உள்ளடக்கம் மட்டுமே ஏன் குறிவைக்கப்படுகிறது என்பதற்கான விளக்கத்தை META-விடமிருந்து பெறுமாறு கேட்டுக் கொண்டேன். தற்போது,  அது தானாகவே META-ஆல் நீக்கம் செய்யப்பட்டதா அல்லது மக்களின் புகார்களின் அடிப்படையில் நீக்கப்பட்டதா என பல சாத்தியங்கள் உள்ளன. தற்போது எங்களுக்கு முழு விளக்கம் கிடைக்கவில்லை. நாங்கள் META-வின் விளக்கத்திற்கு காத்திருக்கிறோம்," என்றார் அவர்.

இன்று, புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஃபஹ்மி அவ்வாறு கூறினார்.

பெர்னாமா வானொலி தமது சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட, ஹமாஸ் பிரதிநிதியுடனான பிரதமரின் உரையாடல் மற்றும் இஸ்மாயில் ஹனியேவின் படுகொலை தொடர்பான இரங்கல் செய்தியும் நீக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஆகவே, அதே சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கும் இதர ஊடக நிறுவனங்களும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம்,எம்சிஎம்சியிடம் புகாரளிக்க வேண்டும் என்றும் ஃபஹ்மி கேட்டுக் கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)