பொது

வீடு புகுந்த களவாடியதாகச் சந்தேகிக்கப்படும் போலீஸ் உறுப்பினர்கள் கைது

01/08/2024 08:19 PM

கோலாலம்பூர், 01 ஆகஸ்ட் (பெர்னாமா) -- நேற்று அதிகாலை, சிலாங்கூர், செமினியில் மியன்மார் நாட்டவர் குடியிருந்த வீட்டில் புகுந்து கொள்ளையடித்ததாக சந்தேகிக்கப்படும், பொது நடவடிக்கை படை, பி.ஜி.ஏ-வின் போலீஸ் உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கம்போங் பாசிர், ஜாலான் சுங்கை பெனிங்கில் அமைந்துள்ள அவ்வீட்டில் நள்ளிரவு மணி 12.17 அளவில் கொள்ளையடித்த ஆடவர் கும்பலில் அவ்விருவரும் இருந்ததாக சந்தேகிக்கப்பட்டதைத் தொடர்ந்து அக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார். 

முறையே 32 மற்றும் 35 வயதுடைய அவ்விரு போலீஸ் உறுப்பினர்களையும் காஜாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுப் பிரிவின் போலீசார் கைது செய்தனர். 

குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை விதிக்க வகைச் செய்யும் 1971-ஆம் ஆண்டு சுடும் ஆயுதச் சட்டம் செக்‌ஷன் மூன்றின் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது. 

விசாரணைக்கு உதவும் பொருட்டு அவ்விருவரும் ஆகஸ்ட் ஏழாம் தேதி வரைக்கும் தடுத்து வைக்கப்படுவர் என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் டத்தோ ஹுசேன் கூறினார். 

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]