சிறப்புச் செய்தி

அடையாள ஆவணம் & குடியுரிமைப் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காணும் முயற்சியில் 'மைசெல்'

01/08/2024 07:46 PM

ஷா ஆலாம், 01 ஆகஸ்ட் (பெர்னாமா) --  சிலாங்கூர் மாநிலத்தில் குறைந்தது ஐந்தாண்டுகளுக்கும் மேலாக வசித்து வருவோர் எதிர்நோக்கும் நீல நிற அடையாள அட்டை மற்றும் பிறப்புப் பத்திர விண்ணப்பம், குழந்தை தத்தெடுப்பு சான்றிதழ் கிடைக்காமை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண  களமிறங்கியுள்ளது  'மைசெல்' சிறப்புப் பிரிவு.

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் முயற்சியில் உருவான இப்பிரிவில் கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கி மேற்கண்ட பிரச்சனைகளை முன்னிறுத்தி இதுவரை ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில், அவற்றில் ஈராயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களுக்கு 'மைசெல்' நிர்வாகம் முழுமையான தீர்வைக் கண்டுள்ளது. 

கடந்த 2008ஆம் ஆண்டே இப்பிரிவு தொடங்கப்பட்டிருந்தாலும் சிலாங்கூர் மாநில முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவ் வீரமானின் சேவையில் அதாவது 2018ஆம் ஆண்டிற்குப் பின்னரே இதில் இரண்டு இந்திய அதிகாரிகளை நியமித்து, அம்மாநில இந்தியர்கள் எதிர்நோக்கும் இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட்டு வந்தது.

முதலில் இந்தியர்கள் எதிர்நோக்கி வந்த பிரச்சினைகளுக்கு மட்டுமே இப்பிரிவில் கவனம் செலுத்தப்பட்டு வந்த நிலையில், மாநில அரசாங்கத்தின் பரிந்துரைந்துரைக்கேற்ப பின்னாளில் அனைத்து இனத்தவரும் இத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

ஆயினும், தற்போது பாப்பாராயுடு மாநில ஆட்சிகுழு உறுப்பினராக இருக்கும் பட்சத்தில், சிலாங்கூர் வாழ் இந்தியர்களின் பிரச்சனைகளுக்கே இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டு விரைந்து தீர்வு காணப்பட்டு வருவதாக, 'மைசெல்' பிரிவின் சிறப்பு அதிகாரி ரெகுபதி ராமன் தெரிவித்தார்.

அதில் முதன்மையாக அடையாள ஆவணங்களைப் பெறுவதில் சிக்கலை எதிர்நோக்கும் இந்தியர்களின் பிரச்சனைகளைக் கண்டறிந்து தேசிய பதிவுத்துறை மற்றும் உள்துறை அமைச்சின் பார்வைக்கு அதனைக் கொண்டுச் செல்வதாக ரெகுபதி விவரித்தார்.

''குடியுரிமைப் பிரச்சனை, அடையாள அட்டை பிரச்சனை, சிவப்பு மற்றும் பச்சை அடையாள அட்டை பிரச்சனை, பிறப்புப் பத்திரம், குழந்தை தத்தெடுப்பு போன்ற பல பிரச்சனைகளுக்கு நாங்கள் இப்பிரிவு மூலமாக தீர்வு கண்டு வருகிறோம். தற்போது பாப்பாராயுடுவின் தலைமையில் மைசெல் பிரிவு புதிய உதவேகத்துடனும் விவேகத்தோடும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது,'' என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்,'' என்றார் அவர்.

சிலாங்கூர் மாநிலத்தில் இத்தகைய பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவோர், மூன்றாம் தரப்பினரின் உதவியை நாடி, மோசடியில் சிக்காமல் மாநில அரசாங்கத்தின் அலுவலகத்திற்கே நேரடியாக வருமாறு ரெகுபதி கேட்டுக் கொண்டார்.

அதற்கு முன்னதாக தங்களின் பிரச்சனைகள் குறித்த மேல் விவரங்களையும் ஆவணத் தகவல்களையும் தெரிந்து கொள்ள 010 2777340  அல்லது 017 8700713 என்ற எண்களில் தமது தரப்பைத் தொடர்புக் கொள்ளுமாறும் அவர் ஆலோசனைக் கூறினார்.
 
-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)