விளையாட்டு

ஒலிம்பிக்: தென் கொரியாவிடம் வீழ்ந்தது மலேசிய இணை

01/08/2024 07:01 PM

பாரிஸ், 01 ஆகஸ்ட் (பெர்னாமா) --  இன்று அதிகாலை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் மலேசிய பூப்பந்து இணை, தென் கொரியாவிடம் வீழ்ந்தது. 

உலகத் தரவரிசையில் ஒன்பதாவது இடத்தில் உள்ள நாட்டின் தேசிய கலப்பு இரட்டையர்களான சென் தங் ஜி - தொ இ வெய் ஜோடி தோல்வியை ஏற்க முடியாமல்  கண்ணீருடன் அரங்கை விட்டு வெளியேறினர். 

ஒலிம்பிக் போட்டியில் முதன் முறை களம் கண்ட சென் தங் ஜி - தொ இ வெய் ஜோடி, குழு பிரிவுகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி காலிறுதியில் தென் கொரியாவின் கிம் வூன் ஹொ - ஜியோங் நா இயுன் இணையரைச் சந்தித்தது. 

41 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் மலேசியா 19-21, 14-21 என்று, நேரடி செட்களில் 
தோல்வி அடைந்துள்ளது. 

இந்த வெற்றியின் மூலம் தென் கொரியா ஜோடியினர், அரையிறுதியில், சக நாட்டு ஆட்டக்காரர்களுடன் மோதவிருக்கின்றனர். 

இதனிடையே, ஆடவர் இரட்டையர் பிரிவில் நாட்டின் முதன் நிலை வீரர்களான ஆரன் சியா - சோ வுய் இக் ஜோடி, நாளை இந்தியாவின் முன்னணி ஆட்டக்காரர்களான  சத்விக்சாய்ராஜ் ரன்கிரெட்டி - சிராக் செட்டியைச் சந்திக்கவிருக்கின்றனர். 

இதுவரை மொத்தம் 11 முறை இந்த ஜோடிகள் சந்தித்திருக்கும் நிலையில், ஆரன் சியா - சோ வுய் இக் இந்தியாவுக்கு எதிராக எட்டு முறை வெற்றி பெற்றுள்ளனர்.  

ஆயினும், 2023 இந்தோனேசிய பொது பூப்பந்து போட்டி, 2022 ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் இவ்வாண்டு ஜனவரியில் நடைபெற்று முடிந்த இந்திய பொது பூப்பந்து போட்டிகளில்  ரன்கிரெட்டி - சிராக் செட்டி நேரடி செட்களில் மலேசிய வீரர்களை வீழ்த்தியுள்ளது. 

மலேசிய இணை காலிறுதியில் வெற்றி பெற்றால், அரையிறுதியில் அது 
சீனாவின் லியாங் கெங் - வாங் சாங் ஜோடியை சந்திக்கும் மற்றுமொரு சவாலை எதிர்கொள்ளும். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)