அரசியல்

பெரிக்காத்தானிலிருந்து கெராக்கான் வெளியேற விரும்பினால்... தாராளமாக வெளியேறலாம்

01/08/2024 07:32 PM

அலோர் ஸ்டார், 01 ஆகஸ்ட் (பெர்னாமா) -- முறையான புரிந்துணர்வு இல்லாவிடில் கெராக்கான் கட்சி தாராளமாக பெரிக்காத்தான் நேஷனலில் இருந்து பிரிந்து செல்லலாம்.

இக்கூட்டணியில் பாஸ் கட்சி எவ்வித பிரச்சனையையும் ஏற்படுத்தவில்லை.

மாறாக, தனது பதவியையும் நிலைப்பாட்டினையும் தக்க வைத்துக் கொள்ளும் வகையில் கூட்டணியை விட்டு விலகுவதாக கெராக்கான் கட்சி பயமுறுத்தியதாக பெரிக்காத்தானின் தேர்தல் குழு இயக்குநர் டத்தோ ஶ்ரீ முஹமட் சனுசி முஹமட் நோர் தெரிவித்தார்.

இருந்தபோதிலும், இம்மாதம் நடைபெறவிருக்கும்  பெரிக்காத்தான் நேஷனலின் மாதாந்திர கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கவும் கலந்தாலோசிக்கவும் பாஸ் தயாராக உள்ளதையும் சனுசி சுட்டிக்காட்டினார்.

தங்கள் தரப்பு நியாயங்களைப் பின்பற்றாவிடில் கட்சியிலிருந்து வெளியாவதாக கெராக்கான் எப்போதும் அறிக்கைவிட்டு வருகிறது.

''அப்படி அவர்கள் வெளியேற விரும்பினால் தாராளமாக வெளியேறலாம், வாசல் கதவு எப்போதும் திறந்தே உள்ளது. நாங்களாக அவர்களைத் துரத்தவில்லை. ஆனால் அவர்கள் வெளியேற விரும்பினாலும் நாங்கள் அதை தடுக்கமாட்டோம்,'' என்று இன்று  விஸ்மா டாருல் அமானில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் கெடா மாநில மந்திரி புசாருமாகிய சனுசி தெரிவித்தார்.  

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)