விளையாட்டு

சுக்மாவில் புதிய உத்வேகத்துடன் களமிறங்குகிறது மலேசிய சிலம்பம் அணி

19/08/2024 08:25 PM

கூச்சிங், 19 ஆகஸ்ட் (பெர்னாமா) --   2024 சுக்மா விளையாட்டு போட்டி குறித்த செய்திகள்.

சுக்மாவில் சில காலங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிலம்பம் போட்டி, இவ்வாண்டில் மீண்டும் பதக்க பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்ட நிலையில், மலேசிய சிலம்பம் அணி, சரவாக் மண்ணில் புதிய உத்வேகத்துடன் களமிறங்குகிறது.

2008, 2010, 2011 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளில் சுக்மாவில் அறிமுகம் கண்ட சிலம்பம் போட்டி, நிறுத்தி வைக்கப்பட்டு, 2022-ஆம் ஆண்டில் கண்காட்சி விளையாட்டாக சேர்த்துக் கொள்ளப்பட்டது.

இம்முறை, சரவாக்கில் நடைபெறும் சுக்மாவில் சிலம்பம் போட்டி மீண்டும் தொடக்கம் காணும் வேளையில், சுமார் 250 பங்கேற்பாளர்கள் கலந்து கொள்வதாக மலேசிய சிலம்பம் சங்கத்தின் தலைவர் டாக்டர் எம். சுரேஷ் கூறினார்.

''முதன்முறையாக இந்த போட்டியில் ஒரு இன அடிப்படையிலான தளம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. அதோடு புள்ளிகளை வழங்கவும் புதிய முறை கையாளப்பட்டுள்ளது. எனவே, ஒரு சிறந்த விளையாட்டு தரத்தை இந்த சுக்மா போட்டியில் காண முடியும்'', என்று அவர் கூறினார்.

இதனிடையே, சிலம்பத்தைக் கற்று கொள்வதன் வழி சிறந்த தற்காப்பு சக்தியைத் தனக்குள் ஏற்படுத்திக் கொள்ள முடிவதாக கூறினார், தமது 5 வயது தொடங்கி கடந்த 11 ஆண்டுகளாக சிலம்பக் கலையை பயின்று வரும் டி. வைஷ்ணவி.

''நான் தற்காப்பு கலையாகதான் முதலில் இதை கற்று கொண்டேன் பின்னாளில் போட்டிகளில் பங்கேற்கவும் இது துணை செய்தது. என்னுடைய பெற்றோர்கள் சிலம்பம் கற்று கொள்ள என்னை வர்புறுத்தவில்லை. மாறாக, நானாகவே ஆர்வத்துடன் கற்றுக் கொண்டேன்'', என்று அவர் தெரிவித்தார்.

இம்முறை, சிலம்பம் போட்டி பல புதிய முயற்சிகளோடு நடைபெறுவதால், அதில் போட்டியாளர்கள் சிறந்த நிலையை அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)