சிறப்புச் செய்தி

தொய்வுக் காணாத மூத்தக்குடிமகள் ராதாவின் தேச உணர்வு

22/08/2024 08:29 PM

ஈப்போ, 22 ஆகஸ்ட் (பெர்னாமா) -- தேச உணர்வை வெளிப்படுத்த பணப் பற்றாக்குறையோ, முதிர்ந்த வயதோ, தனித்து வாழ்வதோ அல்லது உடற்குறையோ தடையில்லை என்பதை பெருமிதத்துடன் கூறுகின்றார் பேராக், ஈப்போ, புந்தோங்கைச் சேர்ந்த ராதா என்று அழைக்கப்படும் ராஜேஸ்வரி குருசாமி. 

தமது பள்ளி பருவத்தில் தொடங்கிய மலேசியக் கொடி மீதான காதல் இன்றளவும் குறையவில்லை என்று கூறும் அவர், அதனை சொந்த செலவில் விநியோகித்து, கடந்த ஐந்து ஆண்டுகளாக நாட்டின்பால் கொண்டிருக்கும் பற்றை வெளிப்படுத்தி மகிழ்கின்றார்.

ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 27-ஆம் தேதி தொடங்கி, ஜாலூர் கெமிலாங்கை விநியோகிக்கும் தமது பணி 55 நாள்களுக்கு, அதாவது மலேசிய தினமான செப்டம்பர் 16-ஆம் தேதி வரையில் நீடிக்கும் என்று நாட்டின் மூத்தக் குடிமகளான 62 வயதுடைய ராதா கூறுகின்றார்.     

2019-ஆம் ஆண்டு, கொவிட்-19 பெருந்தொற்றினால் பலர் வேலை இழந்து, வாழ்வாதாரத்திற்காகப் போராடியக் காலக்கட்டத்தில் தம்மால் இயன்ற உதவிகளை வழங்கியதோடு ஜாலூர் கெமிலாங்கையும் சேர்த்து மக்களுக்கு விநியோகித்ததாக ராதா குறிப்பிட்டார்.   

அப்பெருந்தொற்று, முடிவில்லா தொற்றாக மாறியபோதிலும் சுதந்திர மாதக் காலக்கட்டத்தில் ஜாலூர் கெமிலாங்கை சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு விநியோகிப்பதில் சற்றும் தொய்ந்து போகாத ராதா, ஆண்டின் தொடக்கம் முதலே அதற்காக பணம் சேமிப்பதாகவும் ஆயிரம் ரிங்கிட்டிற்கும் மேலாக அதற்கு செலவிடுவதாகவும் விவரித்தார். 

''பள்ளி பருவத்திலிருந்தே கொடியைத் தொட்டுப் பார்க்க வேண்டும் என்பது என் ஆசை. ஆனால், அதற்கான வாய்ப்பு ஒருமுறை கூட எனக்குக் கிட்டியதில்லை. இப்போது அப்படி இல்லை. என் சொந்த செலவில் நானே அனைவருக்கும் மலேசியக் கொடியை வாங்கி தருகிறேன். நாட்டின்பால் கொண்டிருக்கும் பற்றை பிறர் முகத்திலும் காண்பது எனக்கு பேரின்பத்தைப் பெற்று தரும்,'' என்றார் அவர். 

20 ஆண்டுகளுக்கு முன்னர் விபத்தில் சிக்கி காலில் ஏற்பட்ட காயத்தினால் மாற்றுத்திறனாளியான அவர் தனித்து வாழ்ந்து வந்தாலும் தேசியக் கொடியைச் சொந்த செலவில் பிறருக்கு வாங்கிக் கொடுப்பது தமக்கு சுமையில்லை எனவும் தெரிவித்தார்.  

தமக்குள் ஏற்பட்ட இந்த தேசப்பற்றை வளரும் தலைமுறையினரிடமும் கொண்டு சேர்க்க நினைக்கும் இவர், ஜாலூர் கெமிலாங்கை இன, மதங்களைக் கடந்து அனைவருக்கும், குறிப்பாக அங்குள்ள பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் வழக்கத்தை உருவாக்கிக் கொண்டதாக மூன்று பிள்ளைகளுக்கு தாயாரான அவர் குறிப்பிட்டார். 

''செலவு செய்வதைப் பற்றி நான் பெரிதும் யோசிக்கமாட்டேன். பிள்ளைகளிடையே நாட்டுப் பற்றை மேலோங்கச் செய்ய விரும்புகிறேன். அவர்கள் வழித்தவறி செல்லாமல் நாட்டுப் பற்று உணர்வுடன் இருப்பதற்கு இதுவும் வழிச் செய்யும் என்று நான் நம்புகிறேன்,'' என்றார் அவர். 

இதனிடையே, தமது பெரோடுவா கெம்பாரா ரகக் காரை மலேசிய கொடிகளால் அலங்கரித்து நாட்டுப் பற்று பாடல்களை அதில் ஒலிக்கச் செய்து கம்பீரத்துடன் சாலையில் வலம் வரும்போது மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெருவது அலாதி மகிழ்ச்சி என்பதையும் பிரதிபலித்தார். 

தாம் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பிள்ளைகளின் உதவியோடு தமது வீடும் தேசியக் கொடியால் அலங்கரிப்படுவதாக சுதந்திர மாதத்தை முன்னிட்டு பெர்னாமாவிற்கு வழங்கிய நேர்காணலில் அவர் பகிர்ந்து கொண்டார். 

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]