பொது

உணர்வுப்பூர்வமான ஓவியங்களைக் கண்காட்சி வழியாக மக்களிடம் கொண்டு சேர்க்கிறார் ஓவியர் பிரஷோப் நாயர்

01/09/2024 05:07 PM

செந்தூல், 01 செப்டம்பர் (பெர்னாமா) --   கண்ணால் காணும் யதார்த்தக் காட்சிகளைத் தூரிகையின் மூலம் உயிரோட்டமாக சித்தரிப்பதே ஓவியக் கலை.

மனித உள்ளுணர்வை வசமாக்கும் நுணுக்கங்கள் நிறைந்த இந்த அற்புத கலையை வடிவமைக்க அதன் கலைஞர்கள் பல்வேறான நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர்.

அதில், கண்ணையும் கருத்தையும் தன்பால் ஈர்க்கும் ஓவியங்களை வரைந்து மக்களிடம் கண்காட்சி வழியாக கொண்டு வந்து சேர்கின்றார் ஓவியக் கலைஞர் பிரஷோப் நாயர் ஜி.கே பிரசாத்.

படம் பார்த்து கதை சொல்வது போல அவரின் எண்ண வெளிப்பாடுகளைத் தனது பாணியில் உணர்வுப்பூர்வமாக ஓவியங்களின் மூலம் சித்தரித்து வருகிறார்.

சுபாங் ஜெயா, டெய்லர்ஸ் பல்கலைக்கழகத்தில் கட்டடக் கலையில் தனது பட்டப்படிப்பை முடித்த பிரஷோப் சிறு வயது முதலே ஓவியக் கலையின் மீது காதல் கொண்டவர் ஆவார்.

"நான் எப்போதும் ஒரு கலைஞனாக என்னை நினைத்து கொள்வேன். எனக்கு கற்பனை திறன் உள்ளது. மேலும், கருத்துகளை உருவாக்க எனக்கு பிடிக்கும். நான் சிறுபிள்ளையாக இருக்கும் போது சுவரில் படம் வரைவது போன்றவற்றை செய்வேன். மேலும், காட்சிகள் மற்றும் வர்ணங்களைப் பற்றி என்னால் யோசனை செய்யாமல் இருக்க முடியாது. ஆக, இதுவே என்னுடைய முதல் தனிநபர் கண்காட்சி. என்னுடைய கற்பனைகளை ஓவியங்களின் வழி மக்களுக்குக் காட்சிப்படுத்த இருக்கிறேன்", என்று அவர் தெரிவித்தார்.

பொதுவாகவே, வர்ணங்களால் வடிவமைக்கப்படும் ஓவியங்களுக்குப் பல்வேறு உணர்வைகளை வெளிப்படுத்தும் ஆற்றல் இருக்கிறது.

அதோடு, அதனை சித்தரிப்பதற்கு அதிக கால அவகாசமும் தேவைப்படுகிறது என்பதால் கருப்பு வெள்ளை ஓவியங்களுக்கே அதிக முக்கியம் கொடுப்பதாக அவர் கூறினார்.

எனினும், கருப்பு வெள்ளை ஓவியமாக இருந்தாலும் அதன் அளவைப் பொருத்தே அதனை செய்து முடிப்பதற்கான கால அவகாசத்தை நிர்ணயம் செய்ய முடியும் என்று பிரஷோப் நாயர் விளக்கினார்.

"அந்த பெரிய ஓவியம் 3A0 அளவு, ஒரு ஓவியம் 2 மாதங்கள் எடுக்கும். A2 அளவுகள் சுமார் இரண்டு வாரங்கள் ஆகும். அதோடு A3 அளவு என்னிடம் ஆறு ஓவியங்கள் இருக்கிறது. அதில் ஒன்றை முடிப்பதற்கு ஒருவார கால அவகாசம் தேவைப்படும். ஆம், ஒரு முழுமை பெற்ற ஓவியத்தை வரைந்து முடிக்க ஒரு வாரத்திற்கு மேல் ஆகும்", என்று பிரஷோப் கூறினார்.

தாம் வரையும் ஓவியங்களின் மூலம் மக்களுக்கு உணர்வுப்பூர்வமான கருத்துகளை மட்டுமே கொண்டு சேர்ப்பதை நோக்கமாக கொண்டிருக்கும் அவர், இதனை எதிர்காலத்தில் பொருளீட்டும் தொழிலாக மாற்றுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே, மக்களின் ஆதரவு குறித்து பிரஷோப் இடம் வினவப்பட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.

"நான் என்னுடைய சொந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். குறிப்பாக திறப்பு விழாவின் போது சிலர் என்னிடம் கூறினர், இங்குள்ள ஓவியங்கள் அவர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. மேலும், ஓவியத்தின் மூலம் வெளிப்படும் கருத்துகள் தங்களைக் கவர்ந்ததாக கூறினர். அவர்களுடனான நீண்ட பேச்சு வார்த்தை நடத்தினேன்", என்று அவர் மகிழ்ச்சி பொங்க கூறினார்.

TAKE CONTROL எனும் கருப்பொருளில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி தொடங்கிய இந்த ஓவியக் கண்காட்சி, இம்மாதம் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை கோலாலம்பூர் செந்தூல், ArtVoice Gallery-யில் நடைபெறவுள்ளது.

இதுவே பிரஷோப் நாயரின் முதல் தனிநபர் கண்காட்சி என்பது குறிப்பிடத்தக்கது. 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)