பொது

காணாமல் போன மீனவர்கள் பாதுக்காப்பாக மீட்கப்பட்டனர்

23/12/2024 07:17 PM

ஜார்ஜ்டவுன், 23 டிசம்பர் (பெர்னாமா) -- கடந்த திங்கட்கிழமை, பினாங்கு, கோலா சுங்கை பினாங், கெராசூட் கடற்கரையில் காணாமல் போனதாக கூறப்பட்ட இரண்டு மீனவர்கள் நேற்று இந்தோனேசியா ஆச்சே கடற்கரையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

தங்களின் படகு பெரிய அலைகளால் அடித்துச் செல்லப்பட்டபோது, உயிருடன் தப்ப முடியாது என்றே தங்களுக்கு தோன்றியதாக அவ்விருவரும் கூறினர்.

எனினும், ஆறு நாள்களாக ஆழ்கடலில் சிக்கிக் கொண்ட 22 வயதான முஹமட் இக்மால் ஹகிமி இஸ்மாயில் மற்றும் 25 வயதான நோர் ஹஸ்ருல் அப்துல்லா ஆகிய இருவரும், பாதுகாப்பாக கரை சேர இறைவனை மட்டுமே நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்ததாக தெரிவித்தனர்.

கடந்த திங்கட்கிழமை மதியம் 3 மணிக்கு கடலுக்குச் சென்ற அவர்கள், படகின் இயந்திரம் பழுதடைந்திருப்பது கண்டனர்.

அதே சமயத்தில் கடலின் அலையும் புயல் காற்றும் வேகமாக இருந்ததாகவும் முஹமட் இக்மால் கூறினார்.

சம்பவம் குறித்து உதவி கேட்க தமது முதலாளியைத் தொடர்பு கொண்டபோது, உதவிக்கு ஆட்களை அனுப்புவதாக அவர் கூறியதாக அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், இரவு வரை எந்த உதவியும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்றும் முஹமட் இக்மால் மேலும் தெரிவித்தார்.

"நாங்கள் காத்திருந்தோம், அவர்கள் வரவில்லை, நாங்கள் புலனம் வழி அவர்களைத் தொடர்பு கொண்டு நள்ளிரவு 12 மணி வரை காத்திருந்தோம். மீண்டும் காற்று வீசியது. ஒருவர் நங்கூரம் அமைக்க வந்தார். நாங்கள் நங்கூரம் அமைத்து விட்டோம். பிறகு படகு முன்புறமாக கவிழ்வது போல் இருந்தது. நாங்கள் நீரில் மூழ்கிவிடுவோம் என்று பயந்தோம். எனவே, நங்கூரத்தை இழுத்து பின்புறமாக அமைத்தோம். பின்னோக்கி செல்லும் வரை," என்றார் இக்மால் ஹக்கிமி 

இதனிடையே, இச்சம்பவம் அவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய போதிலும், மீனவர்களாக வேலைக்குச் சேர்ந்து ஒன்றரை ஆண்டுகளே ஆகியிருப்பதால் அவ்வேலையைத் தொடர்வதில் ஆர்வம் கொண்டிருப்பதாக, நோர் ஹஸ்ருல் தெரிவித்தார்.

"இதற்கு முன் அனுபவமில்லை. இதுவே முதல்முறை. சாதாரணமாக சில விஷயங்கள் நடக்கும். ஆனால், இப்படி இதுபோன்று நடந்ததில்லை," நோர் ஹஸ்ருல் கூறினார்.

இன்று, ஆச்சேவிலிருந்து லிம்போஙா பத்து மௌவுங் துறைமுகத்தை வந்தடைந்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் தாங்கள் சந்தித்த இன்னல்களைத் தெரிவித்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)