பொது

‘GENG PACIFIC SIVA’ கும்பலைச் சேர்ந்த 16 இந்திய ஆடவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

23/12/2024 06:19 PM

பட்டர்வெர்த், 23 டிசம்பர் (பெர்னாமா) -- ‘Geng Pacific Siva’ என்றழைக்கப்படும் திட்டமிட்ட குற்றச்செயலில் ஈடுபடும் கும்பலில் உறுப்பினராக இருந்த குற்றத்திற்காக, 16 இந்திய ஆடவர்கள் இன்று, பினாங்கு, பட்டர்வெர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

2012-ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றங்களுக்கான சிறப்பு நடவடிக்கை சட்டம், சொஸ்மாவின் கீழ், அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

44 வயதான எம். சுப்ரமணியம், 36 வயதான ஜி. திலகராஜன், 39 வயதான எம். கேசவன், 26 வயதான என். ஷர்வின், 26 வயதான டி. லிகேன் குமார், 24 வயதான எம். தினேஷ்வரன், 23 வயதான பி. கிருபாகரன், 27 வயதான ஜி. மெஹெஷ்குமரா, 28 வயதான எம். ஜனகேஷ் ஆகியோர் மீது இன்று குற்றம் சுமத்தப்பட்டது.

30 வயதான ஆர். லோகேஸ்வராஜ், 44 வயதான கே. ஹென்ரி, 40 வயதான எம். சிவசங்கரன், 29 வயதான எம். பார்திபன், 32 வயதான எஸ். அருணன், 28 வயதான எஸ். தினேஷ்வரன் மற்றும் 31 வயதான வி. அழகேஸ் ஆகியோர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது.

நீதிபதி நோர் அசா கஸ்ரான் முன்னிலையில், அக்குற்றச்சாட்டு தமிழில் வாசிக்கப்பட்டபோது அவர்களிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

ஏனெனில், அவர்கள் அனவைரும் சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதால், உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறும்.

2016-ஆம் ஆண்டு ஜூன் முதல் இவ்வாண்டு நவம்பர் 26-ஆம் தேதி வரையில், ‘Geng Pacific Siva’ எனும் கும்பலில் உறுப்பினராக செயல்பட்டதாக  அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டம், செக்‌ஷன் 130V (1)-இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுவதால், குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

அவர்கள் அனைவரையும் ஜாமினில் விடுவிக்காத நீதிமன்றம், வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)