பொது

OP TIRIS 3.0 நடவடிக்கை; எட்டு கோடியே ஒரு லட்சத்து பத்தாயிரம் ரிங்கிட் மதிப்புடைய பொருட்கள் பறிமுதல்

01/09/2024 05:44 PM

கூடாட், 01 செப்டம்பர் (பெர்னாமா) --  கடந்த ஜனவரி முதலாம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சு மேற்கொண்ட Op Tiris 3.0 நடவடிக்கையின் மூலமாக எட்டு கோடியே ஒரு லட்சத்து பத்தாயிரம் ரிங்கிட் மதிப்புடைய உதவித் தொகை பெறப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களைப் பறிமுதல் செய்ததோடு 496 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அதே காலகட்டத்தில் நாடு தழுவிய அளவில் 29 ஆயிரத்து 487 சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதோடு அவற்றிலிருந்து ஈராயிரத்து ஐந்து புகார்களும் பதிவு செய்யப்பட்டதாக உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சின் அமைச்சர் டத்தோ அர்மிசான் முஹமட் அலி தெரிவித்தார்.

கட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் உதவித் தொகை பெறப்பட்ட பொருட்களைத் தவறாகப் பயன்படுத்துவதையும் கடத்துவதையும் தடுக்க இச்சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், டீசல், ரோன்95 ரக பெட்ரோல், 1 கிலோகிராம் பாக்கெட் சமையல் எண்ணெய், திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு, கோதுமை மாவு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட ஒரு கிலோகிராம் வெள்ளை சர்க்கரை ஆகியவற்றை பதுக்கும் நடவடிக்கைகளை முறியடிக்கவும் இந்த Ops Tiris 3.0 துணைப் புரிந்துள்ளதாக டத்தோ அர்மிசான் விவரித்தார்.

இன்று சபா, கூடாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அர்மிசான் அவ்வாறு கூறினார்.

இதனிடையே, கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி நெகிரி செம்பிலானில் உள்ள மூன்று வெவ்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் அரச மலேசிய போலீஸ் படையுடன் தமது அமைச்சும் இணைந்து, உதவித் தொகைப் பெறப்பட்ட சமையல் எண்ணெய் மோசடியை முறியடிக்க முடிந்ததாகவும் அர்மிசான் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)