கோலாலம்பூர், 01 பிப்ரவரி (பெர்னாமா) -- இன்று தொடங்கி கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் லாபுவான் கூட்டரசு பிரதேசங்கள், 2022-ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட தேசிய வனத்துறை சட்டம், சட்டம் A-1-6-6-7 அமல்படுத்தப்பட்டுள்ளது.
வன அமலாக்கம் உட்பட எச்.எஸ்.கே எனப்படும் நிரந்த பராமரிக்கப்பட்ட வனப்பகுதி, எச்.எஸ்.கே-வின் நிர்வகிப்பை மேம்படுத்துவதோடு அவற்றை வலுப்படுத்தவும் 1984-ஆம் ஆண்டு தேசிய வனத்துறை சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் இயற்கைவள மற்றும் இயற்கை நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் தெரிவித்தார்.
62 விதிமுறைகளை உட்படுத்திய இச்சட்டம், எச்.எஸ்.கே-வை மாற்றுவதற்கான அல்லது வெளியேற்றுவதற்கான செயல்முறையை உள்ளடக்கி திருத்தமும் மேம்பாடும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அதில், பொது விசாரணைகளின் அவசியம் குறித்து அறிமுகப்படுத்தப் பட்டிருப்பதோடு, வனக் குற்றங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபர்களிடம் பரிசோதனையும் விசாரணையும் மேற்கொள்ளக் கூட்டரசு வனத்துறை அதிகாரிகளை நியமிக்கும் செயல்முறையும் இடம்பெற்றுள்ளது.
அச்சட்டத் திருத்தம், வனக் குற்றங்களுக்கான அபராத விகிதம் மற்றும் தண்டனை அதிகரிப்பையும் உள்ளடக்கி இருக்கிறது.
அதாவது அதிகபட்ச அபராதம் 20 ஆயிரம் ரிங்கிட்டில் இருந்து, 50 லட்சம் ரிங்கிட்டிற்கும், அதிகபட்ச சிறைத் தண்டனை ஏழில் இருந்து 20 ஆண்டுகளுக்கும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)