பொது

வேண்டுமென்றே மோதி விபத்தை ஏற்படுத்திய மூவரை தேடும் பணி தீவிரம்

01/02/2025 06:21 PM

கோலாலம்பூர், 01 பிப்ரவரி (பெர்னாமா) -- கடந்த புதன்கிழமை,  கோலாலம்பூர் ஜாலான் கிள்ளான் லாமாவில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தின் முன், இரு வாகனங்கள் வேண்டுமென்றே செலுத்தப்பட்டு ஆடவர் கும்பல் மீது மோதிய சம்பவத்தில் தொடர்புடைய மூன்று ஆடவர்களைப் போலீசார் இன்னும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

அச்சம்பவத்திற்குத் தொடர்புடைய மூன்று ஆடவர்களை தேடும் முயற்சியில் போலீஸ் ஈடுபட்டு வருவதாக, பிரிக்ஃபில்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி மஷாரிமான் கு மஹ்மூட்  கூறினார்.

இவ்வழக்கு தொடர்பாக, இதுவரை புதிதாக யாரும் கைது செய்யப்படவில்லை. மாறாக, குற்றவாளிகளைத் தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

சம்பவத்திற்குத் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் ஐந்து நபர்களை முன்னதாக போலீஸ் கைது செய்துள்ளதாக, கடந்த வியாழக்கிழமை, கோலாலம்பூர் போலீஸ் துணைத் தலைவர் டத்தோ அஸ்ரி அக்மார் அயோப் ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

விசாரணையின் அடிப்படையில், அவர்கள் அனைவருக்கும் குற்றப் பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குழுவிற்கும் இடையில் ஏற்பட்ட தவறான புரிந்துணர்வு காரணமாக, இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனிடையே, சிலாங்கூர், பந்திங், தாமான் ஶ்ரீ பாயு மோரிப்-ஐ (Banting, Taman Seri Bayu Morib) சேர்ந்த 25 வயதான எம் தேவிந்திரன், ப்ந்திங் ஜாலான் ராபாவை (Banting, Jalan Raba) சேர்ந்த 19 வயதான எம் ரஞ்சித் மற்றும் சிலாங்கூர் காப்பார் தாமான் இந்தானை (Kapar, Taman Intan) சேர்ந்த 27 வயதான எம். லவிந்திரன் ஆகிய மூன்று சந்தேக நபர்களைப் போலீஸ் அடையாளம் கண்டுள்ளது.
       
இச்சம்பவத்தில் இரு ஆடவர்கள் காயம் அடைந்துள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)